Thursday, October 6, 2011

வெட்டவெளியில்


வெட்டவெளியில் 




எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்லருந்தே நாங்க ரெண்டுக்குப் போவரது அந்த முறுக்காறு கழனி, கழுதை மடக்கி கழனி (விளைச்சலில் கழுதை மேய்ந்து அதை மடக்கி பிடித்ததனால் அவருக்கு கழுதை மடக்கி என்று பெயர்) சுல்தா கழனி, மசால் வடை கழனி,குயிலாப்பாளையத்தார் கழனி.

இப்படி காலையில எழுந்திருச்சு போய்ட்டு வயலுக்குப் பாயறத் தண்ணியில அலம்பிட்டு வர்ரதுதான் அன்றாட வழக்கம்.
  ஏன் எங்கப்பாட்டனுக்குப் பாட்டன் ரெண்டுக்குப் போனது கூட இப்படித்தான். 

நான் மட்டுமல்ல எங்க ஊருல ஆலையில வேலை செய்யறவங்க முதல் கவர்ன்மெண்ட் ஆபிஸில என்ஜினியரா இருக்கிறவங்க வரை இப்ப்டித்தான்.

காலையில ஆறு மணிக்கு எழுந்து கிளம்பினா, ஒவ்வொரு தூங்கிற நண்பனையும் வீட்ல போய் எழுப்பி கூட்டிட்டு போறதுக்குள்ளே ஏழு மணியாகிடும். எங்களில் எவனாவது ஒருத்தன் பல் துலக்க வேலங்குச்சியை ஆளுக்கு ஒன்னு கொடுப்பான்.அத வாயில வெச்சு மாடு வெக்கில அசைப்போடற மாதிரி நாங்க எங்க கடுவாப் பல்லுல வைத்து மென்னுகிட்டே போவோம். எந்த கழனியில தண்ணி எறைக்கிதோன்னு பார்த்து அங்க போயி உட்காருவோம்.

வரப்பில உட்கார்ந்தா அவ்வளவுதான். ''உங்களுக்கெல்லாம் அறிவுயில்ல. சோறுதான் திங்கறீங்களா. இல்ல வேற ஏதாவது திங்கறீங்களா? கதிர் வந்துக்குது இந்தாண்ட தண்ணி பாயுது.வரப்பில உட்கார்ந்திருக்கிறீங்க எந்திரிங்கியா'' கழனிக்குத் தண்ணி காட்றவன் எங்களையும் தண்ணி காட்டிடுவான். கடைசியா தண்ணிகாட்டித் தொல்லை தாளாம அறுத்த கழனியை தேடிப்போய் உட்காருவோம்.

உட்காரும்போது ஒருத்தன் ஊசி வேணுமா? நூலுவேணுமா?ன்னு கேட்பான். ஊசின்னா கிட்ட உட்கார்ந்து பேசிக்கிட்டே ரெண்டுக்குப்போறது.நூலுன்னா எட்ட உட்கார்ந்து பேசிக்கிட்டே ரெண்டுக்கு போறது.

எல்லோரும் நூலுன்னு சொல்லி எட்டபோய் உட்கார்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நகர்ந்து ஊசிக்கே வந்துடுவோம். காரணம் அவ்வளவு சுவாரஸ்யமான பேச்சு.

ராமாராவ்-காந்தாராவ் நடித்த விடாகண்டன் கொடாகண்டன் படத்தில் என்னம்மா மாயஜாலமண்டான்பான் ஒருத்தன்.

மாய மோதிரம் படத்தில் எலும்புக்கூடு ஒன்னு பாறாங்கல்ல தூக்கி காந்தராவ் தலையில போடட்டுமா'ன்னு சொல்லும். எரிச்சல் தாங்காம போட்டுத் தொலைன்னு சொல்லுவான் காந்தாராவ். உடனே எலும்புக்கூடு பாறாங்கல்ல போட்டதும் ஒரு பாம்பு வந்து அவன் கையில மோதிரமா மாறிடும். இவனுக்கு புதுசா ட்ரசெல்லாம் மாறிடும் என்பான் இன்னோருத்தன் . 

சி.ஐ.டி.சங்கர்ல்ல கூலிங்கிளாஸ்ல்ல எழுத்துபோடுவான் எழுத்து ரொம்ப நல்லாயிருக்கு என்பான் மற்றொருவன்.

இப்படி ஒவ்வொருத்தனும் தாங்கள் பார்த்த சினிமா கதையை விமர்சிக்கும் போது அவனவன் காந்தாராவும் என்.டி.ஆரும் ஜெயசங்கருமா கற்பனையில் மாறிடுவோம்.

பக்கத்தில் இருக்கிற பெரியவுங்க ' ஏண்டா எம்மா நாழிடா உட்கார்ந்த்துட்டு இருப்பீங்கன்னு சொன்னத கேட்டதும்தான் அவனவன் கால் சட்டையைத் தூக்கிட்டு எழுந்திருச்சு தண்ணி ஓட்ற வாய்க்காலுக்குப் போவோம்.

நாங்க இப்படின்னா அந்தப்பக்கம் படிச்ச ஆபிஸில வேலை செய்யறவங்க இன்னிக்கு எங்க ஏ.இ. பாகூர் சைட்டுக்கு அனுப்பிட்டாண்டா. நோ.டி.ஏ. சைக்கிளிலே தான் லொங்கு . . . லொங்குன்னு மிதிச்சிக்கிட்டு போகனும். ரொம்ப நாள் பழியை இன்னிக்கு தீத்துக்கிறான்'' என்பார் ஜே.இ,யா வேலை செய்யறவர்.

அவருகிட்ட இருக்கிற எல்.டி.சி யானவரு,''ஏண்டா ஒரு மாசம் செஞ்ச ஓ.டி. இன்னும் கிடைக்கல. இந்த மாசமாவது கெடைக்குமான்னு பே அக்கவுண்ட்ல்ல வேலை செய்யறவரப் பார்த்து கேட்பார்.அதுக்கு இன்னும்'பில்லு சேங்ஷன் ஆகல ஆனப்பிறகு அனுப்பிடுவாங்கன்னு சொல்லுவார்.

இந்தப்பக்கம் ஆலையில வேலை செய்யறவங்க,'' ஏய்யா. இந்த வருஷம் தீபாவளிக்கு எத்தனை சதம் போனஸ்னு எங்க ஊர் யூனியன் லீட்ர பார்த்து கேட்பாரு.10 சதம்தான் மொதலாளி சொல்றான். நாங்க 15 கேட்டிருக்கோம்''னு சொல்லிட்டு வேகமா ஷிப்டு மீட்டிங்குக்குப் போவாறு.

வாய்க்கால ஒட்ன பக்கத்தில ஆலையிலயிருந்து ரிட்டையரான கிழங்க நேத்து பாக்கத்தில என்ன கூத்தய்யா. இன்னைக்கு எந்தப்பார்ட்டின்னு ஒரு கிழம் விசாரிக்கும்.

நேத்து கூத்தே சரியில்லய்யா. எல்லா ஒரே தண்ணி மயம். அந்த பெரியசாமி போனதிலருந்தே கூத்தே சரியில்ல. இன்னைக்கு 'வள்ளித்திருமணம்' என்றுஅறுத்துக் கொண்டே எதிரேயுள்ள பூண்டு செடியைப் புடுங்குவார்.

இப்படி ஒவ்வொரு கழனியிலும் ஒவ்வொரு பார்ட்டிங்க அந்தந்த இலாக்காவுக்கு ஏற்ப உட்கார்ந்துட்டு இருக்கும். பிறகு நாங்க வாய்க்கால பாயிறத் தண்ணியில கால அலம்பும்போது, ஒருத்தர்'' ஏண்டா அந்த குட்டிய இழுத்துகிட்டு ரங்கசாமி பையன் ஓடி போயிட்டானாமே.''

''ஆமாண்டா. கப்சிப்ன்னு இருக்காங்க'' என்றார் இன்னொருவர். 

நாங்க கால அலம்பிக்கிட்டு பெரிய வரப்புல நடந்து வந்துகிட்டு இருக்கிறப்போ எங்கள்ல ஒருத்தன் ''ஏண்டா இழுத்துக்கிட்டுப்போனாத்தான் என்ன? அதுல ஒன்னும் தப்பில்லத்தாண்டா'' என்றான்.

இன்னொருத்தன்,''சீ போடா. தெரியாம அந்தக் குட்டிய இழுத்துக்கிட்டு போயிட்டாண்டா'' என்றதும் '' அடிச் செருப்பால முளைச்சி மூணு எல வரல, நீங்க பேசற பேச்சாடா'' என்று தலையில ஒன்னுவிட்டாரு பின்னால வந்த ஒருத்தர்.

அவ்வளவுதான் எல்லாரும் தண்ணி டேங்க் பக்கமா ஓடிட்டோம். பிறகு எங்கள்ல ஒருத்தன்,''ஏண்டா அந்தாளு அடிச்சது நம்பள'' என்றான்.

''அதாண்டா எனக்கும் புரியல'' என்றான் இன்னொருத்தன்.

''சரி..சரி..  நாளைக்கு இந்தாளு இதே டைம்ல வாய்க்கால ஒட்னா மாதிரித்தான் உட்கார்ந்து இருப்பான். நீ என்ன செய்யற தண்ணிபாம்ப அடிக்கிற மாதிரி ஒரு பெரிய கல்ல எடுத்து அடி. அப்புறம் பாரேன் அந்த ஆளு மூஞ்சியெல்லாம் சேரா இருக்கும்.''

''அதுதாண்டா சரின்னு கங்கணம் கட்டிக்கிட்டு தண்ணி டேங்க் வழியா போவோம்.

அந்தப் பாதை பெரிய வண்டிப் போறப் பாதைத்தான். இருந்தாலும் ரெண்டு பக்கமும் ஊர்ல்ல உள்ள குப்பையெல்லாம் கொட்டி ஒத்தையடி பாதையா மாறிப் போச்சு. ரெண்டு பக்கமும் குப்பைகள் கோபுரம் மாதிரி  இருக்கும்.அதற்குப் பின்னால வரிசையா ஆடு தொடா செடி, எருக்கஞ்செடி, சப்பாத்தி இதெல்லாம் அடர்த்தியா இருக்கும். நாங்க முன்னுக்குப் போனதும் ஒவ்வொரு புதரிலிருந்து திடீரென ஒவ்வொருத்தருங்க எழுந்து நிற்பாங்க.ஆண்பிள்ளையானாலும் சான் பிள்ளையில்லையா நாங்க அவ்வளவு மரியாதை. ஒரு சில பொம்பளைங்க கண்டும் காணாததுமா கழுத்தை திருப்பிக்கிட்டு உட்கார்ந்து இருப்பாங்க. அவுங்க கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.

இதுதான் எங்களுடைய அன்றாட காலை நடவடிக்கை.

இப்படித்தான் ஒரு நாள் நாங்க ரெண்டுக்கு போய்ட்டு வாய்க்கால்ல கால் அலம்பும் போது எங்க ஊரு முன்னாள் மாம்புருகிட்ட ஒருத்தர்,'' ஏய்யா மாம்புரு. பக்கத்து ஊரு சேரிப் பசங்களுக்கு கக்கூஸ் பாத்ரூமெல்லாம் கட்டி குடுத்துருக்காங்க. நம்ப ஊரு பெரிய ஊரு. ஒதுங்க ஒண்ணும் கட்டித்தர மாட்டானுங்களா கவர்ன்மெண்ட்ல?''

''அட இப்படி காற்றோட்டமா பேசிட்டுப் போறது எப்படி கக்கூஸ் கட்டி அதுல போறது எப்படி?'' என்று மாம்புரு பதில் அளித்ததும் ''நாம போயிடலாம் சரி.  பொம்பளைங்க ஒதுங்க மறைவா ஒரு எடம் வேண்டாம்."

'' ஆமா மாம்புரு இதுக்கு ஏதாச்சும் வழி சொல்லனும்.''

''அப்போ வர ஞாத்திக்கிழமை பஞ்சாய்த்த அய்யனார் கோயில்ல கூட்டிட சொல்லுங்க. தலைவரை வெச்சு பேசிடலாம்''
  
பஞ்சாய்த்து தலைவர்கிட்ட செய்தியைச் சொன்னதும் அவரும் ஊர் சொல்ல சொல்லிட்டார்.
"பாளையம் பஞ்சாய்த்துக் கூட்டம் அய்யனார் கோயில்லவர ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு கூட இருக்கிறது. தவறாம அனைவரும் கூடும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்'' மேளம் அடிச்சு ஊர் சொல்லிட்டுப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சாய்த்து கூட்டம் கூடியாச்சு. தலைவரு எழுந்து நின்னு பேசராரு.
நாம இன்னைக்கு இங்கு கூடியிருக்கிறது. நமக்கு ஒதுங்கறதுக்கு ஒரு எடம் தேவை. அது கவர்ன்மெண்ட்டு கட்டி கொடுக்கனும். நாம ஆம்பளை எப்படி வேணுமானாலும் வெட்ட வெளியில வரப்புல உட்காரலாம். பொண்டுங்க எத்தனை காலத்துக்குத்தான் இப்படி கஷ்ட்டப்படுவாங்க.அதனால பொண்டுங்களுக்காவது ஒதுங்கறத்துக்கு எடத்தை பார்த்து கட்டிக் கொடுக்கனும்ன்னு கேட்போம்'' இப்படி பஞ்சாயத்து தலைவர் பேசினதும், இன்னொருத்தர் எழுந்து நின்னு,''ஒதுங்கறதுக்கு மட்டும் இருந்தா போதாது குளிக்கறதுக்கும் ஒரு எடம் வேணும். எத்தனை காலத்துக்குத்தான் பம்பு கொட்டாயில குளிக்கிறது. நல்லாத் தலையில சோப்பு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருக்கிறப்போ பம்ப்ப நிறுத்தி கொட்டா சாவியை எடுத்துட்டு போயிடுவானுங்க. அதனால இதனோடக் கூட குளிக்கிறதுக்கும் ஒரு எடம் வேண்டும் தலைவரே!'' கூடியிருந்த கூட்டத்தில் இப்படி சொன்னதும்,''ஆமா...ஆமா''ன்னு ஆமோதித்தார்கள்.

வயசில எங்களவிட பெரியவன் எழுந்து நின்னு'' அந்த கெணத்துல கும் (டைவ்) போட்டா கெழவன் திட்டுவான். அதனால ஒரு நீச்சல் குளம் வேண்டும் தலைவரே.''என்றதும் ''டேய்...டேய் முதல்ல ஒதுங்கறத்துக்கும் குளிக்கறதுக்கும் கட்டித்தரச் சொல்லுவோம். கும் போடறதுன்னா ஏ¡¢க்கோ குளத்துக்கோ போய் கும்போடு'' தலைவர் காட்டமா அவைனப் பார்த்து சொன்னார்.

''அதுசரிங்க. கட்டித்தரச் சொல்றது வாஸ்த்துவம். அதுல ஆம்பளைக்குத் தனி பொம்பளைக்குத் தனின்னு குறிப்பிடுங்க. அது தாங்க முக்கியம்''ன்னாரு இன்னொருத்தர்.

    நல்லது. ஆம்பளைக்கு குளிக்கறதுக்கு ஒரு எடம். ஆறு அறை ஒதுங்கறத்துக்கு. பொம்மனாட்டிங்களுக்கு குளிக்கறதுக்கு ஒரு எடம். ஆறு அறை ஒதுங்கறத்துக்கு. போதுமா?''

 ''போதுங்க கூடிய சீக்கிரத்தில ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க'' என்றார் ஒரு பெரியவர்.
''யோவ். நான் சொல்றத இந்த கடுதாசியில எழுதுய்யா'' தலைவர் சொல்கிறார். பக்கத்தில் படிச்ச ஒருத்தர் பேனாவை புடிச்சுக்கிட்டு எழுத ஆரம்பித்தார்.
"பாளையத்து பஞ்சாய்த்தார் ஊர் மக்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடி, ஊர் மக்கள் ஒதுங்குவதற்காகவும்  குளிப்பதற்காகவும் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியே ஆறு கக்கூசும் ஒரு குளியல் அறையும் ஆக மொத்தம் 12 கக்கூசும் இரண்டு குளியளறையும் அரசாங்கம் கட்டித்தரும்படி கணம் மேயர் அவர்களை ஊர் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். இப்படிக்கு பாளையத்தார் பஞ்சாயத்தார்.''

தலைவர் சொல்லி முடித்ததும் ஒரு தடவை எழுதியவர் படித்து காட்டிய பிறகு ஒவ்வொருத்தராக கையெழுத்துப் போட்டனர்.

''ஏம்பா அந்த மாணிக்கம் பறையன் எங்க? கூப்பிடுங்கப்பா பேருக்காக அவங்கிட்ட இதுல ஒரு கையெழுத்து வாங்கணும்.

பஞ்சாயத்தார் கூட்டம் கூடி முடிவெடுத்தாங்கன்னா அரசாங்கம் முறைப்படி தாழ்ந்த சாதிக்காரங்க ஒரு கையெழுத்து போடணும்.''எங்கப்பா அந்த கம்மினாட்டி.'' அவன் கீழ்ச்சாதியை அனாவசியமாகக் குத்தி அவனைத் தேடினார் தலைவர்.

 ''இதோ இருக்கங்க சாமி.'' 

''அடே இந்த தெமாந்துல ஒரு கையெழுத்துப் போடுடா.'' 

''எனக்கு எங்கங்க கையெழுத்துப் போடத் தேரியும். மை கொடுத்தா கைநாட்டு போட்டுட்டு போறேங்க.''

''அதுவும் சரிதான் வேலைய சுலபமா முடிச்சுட்ற.'' ஒருத்தன் எங்கிருந்தோ வண்டிமையை கொண்டுவந்து கொடுக்க கட்டைவிரலில் நன்றாகத்தடவி ஒரு அழுத்து அழுத்தினான்.

 ''அடே. இது நாங்களும் எங்கசாதி பொண்டுங்க குளிக்கிறதுக்காகவும் தான் கவர்ன்மெண்ட்டுக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணப்போறோம். கட்டின பிறகு நீங்கெல்லாம் வர்ரது கிடையாது என்ன?''

''எங்களுக்கு எதுக்குங்க இந்த கண்றாவியெல்லாம். இப்போ இது ஒன்னுதான் இல்லென்னு குறைச்சலாக்கும்.குடிக்கிறது கூழு கொப்புளிக்க பன்னீராம்'' கையை நாட்டிவிட்டு இடத்தை காலிசெய்தான்.

பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் பெரியவர்கள் மனுவை மேரியில( நகரசபை) கொண்டுபோய் அப்போதிருந்த மேயரிடம் கொடுத்தாங்க.

ஊர் மூலை முடுக்கெல்லாம் '' நம்ப ஊர்மக்களுக்கு ஒதுங்க எடம் கட்டப் போறாங்க'' என ஆறு வயசு பையன் முதல் அறுபது வயசு கிழவன்-கிழவி வரை இதே பேச்சு.

மனு கொடுத்த ரெண்டு மாசத்தில கட்றதுக்கு வேண்டிய கல்-மண் வந்து சேர்ந்தது.

ஆனா இன்னும் கட்டியபாடில்லை. கொட்டன மண்ணும் கல்லும் கொறைஞ்சு கிட்டே போகுது.

எதிர்கட்சி தலைவர் முதல் ஆளுங்க்கட்சி அடியாளுங்க வரை எல்லோரும் கடுப்பாகி கட்டுப்பாடோடு இருந்துட்டாங்க.

''இன்னும் ஒரு மாசத்தில் நமக்கு கட்டித்தரல, நாம யாரும் வர தேர்தல்ல ஓட்டுப் போடக்கூடாது. சேரிப்பசங்களுக்குக் கட்டிக்கொடுத்திருக்கானுங்க. நாம்ப என்ன அவ்வளவு கேவலமா? இத எல்லாரும் கௌரவப் பிரச்சனையா எடுத்துக்கிட்டு ஓட்டுப்போடாதீங்க. எந்த கம்மினாட்டி இந்த ஊர்ல வந்து ஓட்டு கேட்கறாங்கன்னு பார்த்துக்குவோம்.

 இப்படி பஞ்சாயத்துத் தலைவர் பேசினத எவனோ மேயர் காதில ஓத, மேயர் தன் சொந்த வீட்டு வேலையைப்போல சுறுசுறுப்பா இயங்க ஆரம்பிச்சிட்டார்.
இப்போ இருக்கிற எம்.எல்.ஏ., மாதிரி அப்போதிருந்த மேயர் தன் சொந்த காசப்போட்டு கக்கூஸ் க்ட்டறதோ ரோடு போட்றதோ கிடையாது. ஏன்னா அப்போ இருந்தவங்களுக்கு சின்ன மீனப்போட்டு பெரிய மீனப் புடிக்கற விஷயம் அவ்வளவா தெரியாது.

எலெக்ஷன் வர இன்னும் ரெண்டு மாசம் இருக்கும். ஆனா எண்ணி பத்தே நாள்ல்ல கட்டி முடிச்சாச்சு!

 இந்த நாளாயிருந்தா எம்.எல்.ஏ.வே வந்து விழா எடுத்து ரிப்பன் வெட்டி, அவரே ரெண்டுக்குப்போவாரு. ஆனா அப்போ கட்டி முடிச்சதும். மேயர் பஞ்சாயத்துத் தலைவரை நேரில் பார்த்து,'' நாலையிலருந்து நீங்க கட்டிடத்தை பாவிக்கலாம். ஆம்பளைக்கு ஒரு தோட்டியும், பொம்பளைக்கு ஒரு தோட்டியும் முனிசிபாலிட்டியிலிருந்து வருவாங்க.'' என்றார்.

தலைவர் வந்து தண்டாராப் போட்டு ஊர் சொல்ல சொல்லிவிட்டார்.

 தண்டாராவைக் கேட்டதும்தான்,ராத்திரியெல்லாம் தூக்கமேயில்ல. காலையில எழுந்திருச்சி நேரா புது எடத்துக்கு போயிட வேண்டியதுதான். எப்போ மணி காலை ஆறு ஆகும்ன்னு படுக்கையில ஒவ்வொருத்தரும் புரண்டுக்கிட்டு இருந்தோம்.

ஆலைச் சங்கு ஊதினதுதான். நாங்க எல்லோரும் சொல்லி வெச்சா மாதிரி  ஒவ்வொருத்தரும் தனித்தனியா வேகமா போனோம். எங்களுக்கு முன்னாடியே ஒரு நீண்ட வரிசை.

ஆம்பளைங்க ஆறு அறைக்கதவு முன்னாடியும் ஆறு வரிசை. பொம்பளைங்க ஆறு அறைக்கதவு முன்னாடியும் ஆறு வரிசை. எங்களுக்கு முன்னாடி ஒருத்தர் போனார். கதவைத் தாப்பாள் போட்டார். பத்து நிமிஷம் கழிச்சும் ஆளு வரல.

அவர் ஒத்த வயசுள்ள ஒரு ஆள், ''ஏய் என்னடா அங்கப் பண்ணிட்டு இருக்க. நல்லா சுகமா தூங்கறியா? சீக்கிரம் வாடா'' டொக்..டொக்கென்னு கதவைத்தட்டினார்.

எரிச்சல் தாளாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

''என்னடா உள்ளார இவ்வளவு நாழி செஞ்சுகிட்டு இருந்த.'' ''அட நீ ஒன்னுப்பா,நானும் முக்கு...முக்குன்னு தம்கட்டி முக்கிட்டேன். ஒன்னும் வரல. நம்பளுக்கு இதெல்லாம் ஒன்னும் சரிப்பட்டு வராது. பழைய எடத்துக்குத்தான் போகணும்பா.'' சொல்லிவிட்டு விர்ரென்று வயல்பக்கம் நடையைக் கட்டினார்.
அடுத்தவர் போனார். போனதும் வழுக்கி விழுந்து முட்டியைப் பேத்துக் கொண்டு வேகமாக முனகிக் கொண்டு வெளியே வந்தார்.

நாங்களும் ஒருத்தர் பின்னால் ஒருத்தர் போக. எங்களுக்கும் அவர்கள் மாதிரி  ஒரு சங்கடம்.

நாங்கள் மட்டுமா அப்படி.பொம்பளைங்களும், '' அடீ! இது ஒன்னும் சா¢ப்பட்டு வராதுடி. கால இந்த அளவுக்கு அகலமா விரிச்சுக்கிட்டு ச்சே... இதுக்குப் போய் இப்படி நீட்டிட்டு நிக்கறீங்க. எப்போதும் போல எருக்கஞ்செடி பக்கத்துல ஒதுங்கிட்டு போங்கடி.'' என்று சொன்ன்வர் வேகமாக குப்பை மேட்டுப் பின்புறம் உள்ள எருக்கஞ்செடி மறைவில் போய் ஒதுங்கினார்.

 கீழ்ச்சாதிக்காரன் ஒதுங்கக்கூடாது. பக்கத்து ஊர் சேரிக்காரங்க பாவிக்கிறானுங்க எங்க ஊர்காரங்களும் பாவிக்கனும் என்று அகங்கார கௌரவ பிரச்சனையால் கட்டப்பட்ட கட்டிடம் பின்பு யாரும் பாவிக்காமல் கதவையும் கானையும் (தண்ணீர் குழாய்) கழட்டிட்டுப் போனது போக. அம்போவென்று அனாதையாக பாழடிஞ்சு போயிருந்ததுல தெரு நாய்ங்க ரெண்டுக்கு போறதும் தங்களுடைய இனவிருத்தியைப் பெருக்கறத்துக்குமா பயன்பட்டுட்டு இருந்தது.


1 comment: