Thursday, October 6, 2011

வெட்டவெளியில்


வெட்டவெளியில் 




எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்லருந்தே நாங்க ரெண்டுக்குப் போவரது அந்த முறுக்காறு கழனி, கழுதை மடக்கி கழனி (விளைச்சலில் கழுதை மேய்ந்து அதை மடக்கி பிடித்ததனால் அவருக்கு கழுதை மடக்கி என்று பெயர்) சுல்தா கழனி, மசால் வடை கழனி,குயிலாப்பாளையத்தார் கழனி.

இப்படி காலையில எழுந்திருச்சு போய்ட்டு வயலுக்குப் பாயறத் தண்ணியில அலம்பிட்டு வர்ரதுதான் அன்றாட வழக்கம்.
  ஏன் எங்கப்பாட்டனுக்குப் பாட்டன் ரெண்டுக்குப் போனது கூட இப்படித்தான். 

நான் மட்டுமல்ல எங்க ஊருல ஆலையில வேலை செய்யறவங்க முதல் கவர்ன்மெண்ட் ஆபிஸில என்ஜினியரா இருக்கிறவங்க வரை இப்ப்டித்தான்.

காலையில ஆறு மணிக்கு எழுந்து கிளம்பினா, ஒவ்வொரு தூங்கிற நண்பனையும் வீட்ல போய் எழுப்பி கூட்டிட்டு போறதுக்குள்ளே ஏழு மணியாகிடும். எங்களில் எவனாவது ஒருத்தன் பல் துலக்க வேலங்குச்சியை ஆளுக்கு ஒன்னு கொடுப்பான்.அத வாயில வெச்சு மாடு வெக்கில அசைப்போடற மாதிரி நாங்க எங்க கடுவாப் பல்லுல வைத்து மென்னுகிட்டே போவோம். எந்த கழனியில தண்ணி எறைக்கிதோன்னு பார்த்து அங்க போயி உட்காருவோம்.

வரப்பில உட்கார்ந்தா அவ்வளவுதான். ''உங்களுக்கெல்லாம் அறிவுயில்ல. சோறுதான் திங்கறீங்களா. இல்ல வேற ஏதாவது திங்கறீங்களா? கதிர் வந்துக்குது இந்தாண்ட தண்ணி பாயுது.வரப்பில உட்கார்ந்திருக்கிறீங்க எந்திரிங்கியா'' கழனிக்குத் தண்ணி காட்றவன் எங்களையும் தண்ணி காட்டிடுவான். கடைசியா தண்ணிகாட்டித் தொல்லை தாளாம அறுத்த கழனியை தேடிப்போய் உட்காருவோம்.

உட்காரும்போது ஒருத்தன் ஊசி வேணுமா? நூலுவேணுமா?ன்னு கேட்பான். ஊசின்னா கிட்ட உட்கார்ந்து பேசிக்கிட்டே ரெண்டுக்குப்போறது.நூலுன்னா எட்ட உட்கார்ந்து பேசிக்கிட்டே ரெண்டுக்கு போறது.

எல்லோரும் நூலுன்னு சொல்லி எட்டபோய் உட்கார்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நகர்ந்து ஊசிக்கே வந்துடுவோம். காரணம் அவ்வளவு சுவாரஸ்யமான பேச்சு.

ராமாராவ்-காந்தாராவ் நடித்த விடாகண்டன் கொடாகண்டன் படத்தில் என்னம்மா மாயஜாலமண்டான்பான் ஒருத்தன்.

மாய மோதிரம் படத்தில் எலும்புக்கூடு ஒன்னு பாறாங்கல்ல தூக்கி காந்தராவ் தலையில போடட்டுமா'ன்னு சொல்லும். எரிச்சல் தாங்காம போட்டுத் தொலைன்னு சொல்லுவான் காந்தாராவ். உடனே எலும்புக்கூடு பாறாங்கல்ல போட்டதும் ஒரு பாம்பு வந்து அவன் கையில மோதிரமா மாறிடும். இவனுக்கு புதுசா ட்ரசெல்லாம் மாறிடும் என்பான் இன்னோருத்தன் . 

சி.ஐ.டி.சங்கர்ல்ல கூலிங்கிளாஸ்ல்ல எழுத்துபோடுவான் எழுத்து ரொம்ப நல்லாயிருக்கு என்பான் மற்றொருவன்.

இப்படி ஒவ்வொருத்தனும் தாங்கள் பார்த்த சினிமா கதையை விமர்சிக்கும் போது அவனவன் காந்தாராவும் என்.டி.ஆரும் ஜெயசங்கருமா கற்பனையில் மாறிடுவோம்.

பக்கத்தில் இருக்கிற பெரியவுங்க ' ஏண்டா எம்மா நாழிடா உட்கார்ந்த்துட்டு இருப்பீங்கன்னு சொன்னத கேட்டதும்தான் அவனவன் கால் சட்டையைத் தூக்கிட்டு எழுந்திருச்சு தண்ணி ஓட்ற வாய்க்காலுக்குப் போவோம்.

நாங்க இப்படின்னா அந்தப்பக்கம் படிச்ச ஆபிஸில வேலை செய்யறவங்க இன்னிக்கு எங்க ஏ.இ. பாகூர் சைட்டுக்கு அனுப்பிட்டாண்டா. நோ.டி.ஏ. சைக்கிளிலே தான் லொங்கு . . . லொங்குன்னு மிதிச்சிக்கிட்டு போகனும். ரொம்ப நாள் பழியை இன்னிக்கு தீத்துக்கிறான்'' என்பார் ஜே.இ,யா வேலை செய்யறவர்.

அவருகிட்ட இருக்கிற எல்.டி.சி யானவரு,''ஏண்டா ஒரு மாசம் செஞ்ச ஓ.டி. இன்னும் கிடைக்கல. இந்த மாசமாவது கெடைக்குமான்னு பே அக்கவுண்ட்ல்ல வேலை செய்யறவரப் பார்த்து கேட்பார்.அதுக்கு இன்னும்'பில்லு சேங்ஷன் ஆகல ஆனப்பிறகு அனுப்பிடுவாங்கன்னு சொல்லுவார்.

இந்தப்பக்கம் ஆலையில வேலை செய்யறவங்க,'' ஏய்யா. இந்த வருஷம் தீபாவளிக்கு எத்தனை சதம் போனஸ்னு எங்க ஊர் யூனியன் லீட்ர பார்த்து கேட்பாரு.10 சதம்தான் மொதலாளி சொல்றான். நாங்க 15 கேட்டிருக்கோம்''னு சொல்லிட்டு வேகமா ஷிப்டு மீட்டிங்குக்குப் போவாறு.

வாய்க்கால ஒட்ன பக்கத்தில ஆலையிலயிருந்து ரிட்டையரான கிழங்க நேத்து பாக்கத்தில என்ன கூத்தய்யா. இன்னைக்கு எந்தப்பார்ட்டின்னு ஒரு கிழம் விசாரிக்கும்.

நேத்து கூத்தே சரியில்லய்யா. எல்லா ஒரே தண்ணி மயம். அந்த பெரியசாமி போனதிலருந்தே கூத்தே சரியில்ல. இன்னைக்கு 'வள்ளித்திருமணம்' என்றுஅறுத்துக் கொண்டே எதிரேயுள்ள பூண்டு செடியைப் புடுங்குவார்.

இப்படி ஒவ்வொரு கழனியிலும் ஒவ்வொரு பார்ட்டிங்க அந்தந்த இலாக்காவுக்கு ஏற்ப உட்கார்ந்துட்டு இருக்கும். பிறகு நாங்க வாய்க்கால பாயிறத் தண்ணியில கால அலம்பும்போது, ஒருத்தர்'' ஏண்டா அந்த குட்டிய இழுத்துகிட்டு ரங்கசாமி பையன் ஓடி போயிட்டானாமே.''

''ஆமாண்டா. கப்சிப்ன்னு இருக்காங்க'' என்றார் இன்னொருவர். 

நாங்க கால அலம்பிக்கிட்டு பெரிய வரப்புல நடந்து வந்துகிட்டு இருக்கிறப்போ எங்கள்ல ஒருத்தன் ''ஏண்டா இழுத்துக்கிட்டுப்போனாத்தான் என்ன? அதுல ஒன்னும் தப்பில்லத்தாண்டா'' என்றான்.

இன்னொருத்தன்,''சீ போடா. தெரியாம அந்தக் குட்டிய இழுத்துக்கிட்டு போயிட்டாண்டா'' என்றதும் '' அடிச் செருப்பால முளைச்சி மூணு எல வரல, நீங்க பேசற பேச்சாடா'' என்று தலையில ஒன்னுவிட்டாரு பின்னால வந்த ஒருத்தர்.

அவ்வளவுதான் எல்லாரும் தண்ணி டேங்க் பக்கமா ஓடிட்டோம். பிறகு எங்கள்ல ஒருத்தன்,''ஏண்டா அந்தாளு அடிச்சது நம்பள'' என்றான்.

''அதாண்டா எனக்கும் புரியல'' என்றான் இன்னொருத்தன்.

''சரி..சரி..  நாளைக்கு இந்தாளு இதே டைம்ல வாய்க்கால ஒட்னா மாதிரித்தான் உட்கார்ந்து இருப்பான். நீ என்ன செய்யற தண்ணிபாம்ப அடிக்கிற மாதிரி ஒரு பெரிய கல்ல எடுத்து அடி. அப்புறம் பாரேன் அந்த ஆளு மூஞ்சியெல்லாம் சேரா இருக்கும்.''

''அதுதாண்டா சரின்னு கங்கணம் கட்டிக்கிட்டு தண்ணி டேங்க் வழியா போவோம்.

அந்தப் பாதை பெரிய வண்டிப் போறப் பாதைத்தான். இருந்தாலும் ரெண்டு பக்கமும் ஊர்ல்ல உள்ள குப்பையெல்லாம் கொட்டி ஒத்தையடி பாதையா மாறிப் போச்சு. ரெண்டு பக்கமும் குப்பைகள் கோபுரம் மாதிரி  இருக்கும்.அதற்குப் பின்னால வரிசையா ஆடு தொடா செடி, எருக்கஞ்செடி, சப்பாத்தி இதெல்லாம் அடர்த்தியா இருக்கும். நாங்க முன்னுக்குப் போனதும் ஒவ்வொரு புதரிலிருந்து திடீரென ஒவ்வொருத்தருங்க எழுந்து நிற்பாங்க.ஆண்பிள்ளையானாலும் சான் பிள்ளையில்லையா நாங்க அவ்வளவு மரியாதை. ஒரு சில பொம்பளைங்க கண்டும் காணாததுமா கழுத்தை திருப்பிக்கிட்டு உட்கார்ந்து இருப்பாங்க. அவுங்க கஷ்டம் அவுங்களுக்குத்தான் தெரியும்.

இதுதான் எங்களுடைய அன்றாட காலை நடவடிக்கை.

இப்படித்தான் ஒரு நாள் நாங்க ரெண்டுக்கு போய்ட்டு வாய்க்கால்ல கால் அலம்பும் போது எங்க ஊரு முன்னாள் மாம்புருகிட்ட ஒருத்தர்,'' ஏய்யா மாம்புரு. பக்கத்து ஊரு சேரிப் பசங்களுக்கு கக்கூஸ் பாத்ரூமெல்லாம் கட்டி குடுத்துருக்காங்க. நம்ப ஊரு பெரிய ஊரு. ஒதுங்க ஒண்ணும் கட்டித்தர மாட்டானுங்களா கவர்ன்மெண்ட்ல?''

''அட இப்படி காற்றோட்டமா பேசிட்டுப் போறது எப்படி கக்கூஸ் கட்டி அதுல போறது எப்படி?'' என்று மாம்புரு பதில் அளித்ததும் ''நாம போயிடலாம் சரி.  பொம்பளைங்க ஒதுங்க மறைவா ஒரு எடம் வேண்டாம்."

'' ஆமா மாம்புரு இதுக்கு ஏதாச்சும் வழி சொல்லனும்.''

''அப்போ வர ஞாத்திக்கிழமை பஞ்சாய்த்த அய்யனார் கோயில்ல கூட்டிட சொல்லுங்க. தலைவரை வெச்சு பேசிடலாம்''
  
பஞ்சாய்த்து தலைவர்கிட்ட செய்தியைச் சொன்னதும் அவரும் ஊர் சொல்ல சொல்லிட்டார்.
"பாளையம் பஞ்சாய்த்துக் கூட்டம் அய்யனார் கோயில்லவர ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு கூட இருக்கிறது. தவறாம அனைவரும் கூடும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்'' மேளம் அடிச்சு ஊர் சொல்லிட்டுப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சாய்த்து கூட்டம் கூடியாச்சு. தலைவரு எழுந்து நின்னு பேசராரு.
நாம இன்னைக்கு இங்கு கூடியிருக்கிறது. நமக்கு ஒதுங்கறதுக்கு ஒரு எடம் தேவை. அது கவர்ன்மெண்ட்டு கட்டி கொடுக்கனும். நாம ஆம்பளை எப்படி வேணுமானாலும் வெட்ட வெளியில வரப்புல உட்காரலாம். பொண்டுங்க எத்தனை காலத்துக்குத்தான் இப்படி கஷ்ட்டப்படுவாங்க.அதனால பொண்டுங்களுக்காவது ஒதுங்கறத்துக்கு எடத்தை பார்த்து கட்டிக் கொடுக்கனும்ன்னு கேட்போம்'' இப்படி பஞ்சாயத்து தலைவர் பேசினதும், இன்னொருத்தர் எழுந்து நின்னு,''ஒதுங்கறதுக்கு மட்டும் இருந்தா போதாது குளிக்கறதுக்கும் ஒரு எடம் வேணும். எத்தனை காலத்துக்குத்தான் பம்பு கொட்டாயில குளிக்கிறது. நல்லாத் தலையில சோப்பு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருக்கிறப்போ பம்ப்ப நிறுத்தி கொட்டா சாவியை எடுத்துட்டு போயிடுவானுங்க. அதனால இதனோடக் கூட குளிக்கிறதுக்கும் ஒரு எடம் வேண்டும் தலைவரே!'' கூடியிருந்த கூட்டத்தில் இப்படி சொன்னதும்,''ஆமா...ஆமா''ன்னு ஆமோதித்தார்கள்.

வயசில எங்களவிட பெரியவன் எழுந்து நின்னு'' அந்த கெணத்துல கும் (டைவ்) போட்டா கெழவன் திட்டுவான். அதனால ஒரு நீச்சல் குளம் வேண்டும் தலைவரே.''என்றதும் ''டேய்...டேய் முதல்ல ஒதுங்கறத்துக்கும் குளிக்கறதுக்கும் கட்டித்தரச் சொல்லுவோம். கும் போடறதுன்னா ஏ¡¢க்கோ குளத்துக்கோ போய் கும்போடு'' தலைவர் காட்டமா அவைனப் பார்த்து சொன்னார்.

''அதுசரிங்க. கட்டித்தரச் சொல்றது வாஸ்த்துவம். அதுல ஆம்பளைக்குத் தனி பொம்பளைக்குத் தனின்னு குறிப்பிடுங்க. அது தாங்க முக்கியம்''ன்னாரு இன்னொருத்தர்.

    நல்லது. ஆம்பளைக்கு குளிக்கறதுக்கு ஒரு எடம். ஆறு அறை ஒதுங்கறத்துக்கு. பொம்மனாட்டிங்களுக்கு குளிக்கறதுக்கு ஒரு எடம். ஆறு அறை ஒதுங்கறத்துக்கு. போதுமா?''

 ''போதுங்க கூடிய சீக்கிரத்தில ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க'' என்றார் ஒரு பெரியவர்.
''யோவ். நான் சொல்றத இந்த கடுதாசியில எழுதுய்யா'' தலைவர் சொல்கிறார். பக்கத்தில் படிச்ச ஒருத்தர் பேனாவை புடிச்சுக்கிட்டு எழுத ஆரம்பித்தார்.
"பாளையத்து பஞ்சாய்த்தார் ஊர் மக்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடி, ஊர் மக்கள் ஒதுங்குவதற்காகவும்  குளிப்பதற்காகவும் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியே ஆறு கக்கூசும் ஒரு குளியல் அறையும் ஆக மொத்தம் 12 கக்கூசும் இரண்டு குளியளறையும் அரசாங்கம் கட்டித்தரும்படி கணம் மேயர் அவர்களை ஊர் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். இப்படிக்கு பாளையத்தார் பஞ்சாயத்தார்.''

தலைவர் சொல்லி முடித்ததும் ஒரு தடவை எழுதியவர் படித்து காட்டிய பிறகு ஒவ்வொருத்தராக கையெழுத்துப் போட்டனர்.

''ஏம்பா அந்த மாணிக்கம் பறையன் எங்க? கூப்பிடுங்கப்பா பேருக்காக அவங்கிட்ட இதுல ஒரு கையெழுத்து வாங்கணும்.

பஞ்சாயத்தார் கூட்டம் கூடி முடிவெடுத்தாங்கன்னா அரசாங்கம் முறைப்படி தாழ்ந்த சாதிக்காரங்க ஒரு கையெழுத்து போடணும்.''எங்கப்பா அந்த கம்மினாட்டி.'' அவன் கீழ்ச்சாதியை அனாவசியமாகக் குத்தி அவனைத் தேடினார் தலைவர்.

 ''இதோ இருக்கங்க சாமி.'' 

''அடே இந்த தெமாந்துல ஒரு கையெழுத்துப் போடுடா.'' 

''எனக்கு எங்கங்க கையெழுத்துப் போடத் தேரியும். மை கொடுத்தா கைநாட்டு போட்டுட்டு போறேங்க.''

''அதுவும் சரிதான் வேலைய சுலபமா முடிச்சுட்ற.'' ஒருத்தன் எங்கிருந்தோ வண்டிமையை கொண்டுவந்து கொடுக்க கட்டைவிரலில் நன்றாகத்தடவி ஒரு அழுத்து அழுத்தினான்.

 ''அடே. இது நாங்களும் எங்கசாதி பொண்டுங்க குளிக்கிறதுக்காகவும் தான் கவர்ன்மெண்ட்டுக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணப்போறோம். கட்டின பிறகு நீங்கெல்லாம் வர்ரது கிடையாது என்ன?''

''எங்களுக்கு எதுக்குங்க இந்த கண்றாவியெல்லாம். இப்போ இது ஒன்னுதான் இல்லென்னு குறைச்சலாக்கும்.குடிக்கிறது கூழு கொப்புளிக்க பன்னீராம்'' கையை நாட்டிவிட்டு இடத்தை காலிசெய்தான்.

பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் பெரியவர்கள் மனுவை மேரியில( நகரசபை) கொண்டுபோய் அப்போதிருந்த மேயரிடம் கொடுத்தாங்க.

ஊர் மூலை முடுக்கெல்லாம் '' நம்ப ஊர்மக்களுக்கு ஒதுங்க எடம் கட்டப் போறாங்க'' என ஆறு வயசு பையன் முதல் அறுபது வயசு கிழவன்-கிழவி வரை இதே பேச்சு.

மனு கொடுத்த ரெண்டு மாசத்தில கட்றதுக்கு வேண்டிய கல்-மண் வந்து சேர்ந்தது.

ஆனா இன்னும் கட்டியபாடில்லை. கொட்டன மண்ணும் கல்லும் கொறைஞ்சு கிட்டே போகுது.

எதிர்கட்சி தலைவர் முதல் ஆளுங்க்கட்சி அடியாளுங்க வரை எல்லோரும் கடுப்பாகி கட்டுப்பாடோடு இருந்துட்டாங்க.

''இன்னும் ஒரு மாசத்தில் நமக்கு கட்டித்தரல, நாம யாரும் வர தேர்தல்ல ஓட்டுப் போடக்கூடாது. சேரிப்பசங்களுக்குக் கட்டிக்கொடுத்திருக்கானுங்க. நாம்ப என்ன அவ்வளவு கேவலமா? இத எல்லாரும் கௌரவப் பிரச்சனையா எடுத்துக்கிட்டு ஓட்டுப்போடாதீங்க. எந்த கம்மினாட்டி இந்த ஊர்ல வந்து ஓட்டு கேட்கறாங்கன்னு பார்த்துக்குவோம்.

 இப்படி பஞ்சாயத்துத் தலைவர் பேசினத எவனோ மேயர் காதில ஓத, மேயர் தன் சொந்த வீட்டு வேலையைப்போல சுறுசுறுப்பா இயங்க ஆரம்பிச்சிட்டார்.
இப்போ இருக்கிற எம்.எல்.ஏ., மாதிரி அப்போதிருந்த மேயர் தன் சொந்த காசப்போட்டு கக்கூஸ் க்ட்டறதோ ரோடு போட்றதோ கிடையாது. ஏன்னா அப்போ இருந்தவங்களுக்கு சின்ன மீனப்போட்டு பெரிய மீனப் புடிக்கற விஷயம் அவ்வளவா தெரியாது.

எலெக்ஷன் வர இன்னும் ரெண்டு மாசம் இருக்கும். ஆனா எண்ணி பத்தே நாள்ல்ல கட்டி முடிச்சாச்சு!

 இந்த நாளாயிருந்தா எம்.எல்.ஏ.வே வந்து விழா எடுத்து ரிப்பன் வெட்டி, அவரே ரெண்டுக்குப்போவாரு. ஆனா அப்போ கட்டி முடிச்சதும். மேயர் பஞ்சாயத்துத் தலைவரை நேரில் பார்த்து,'' நாலையிலருந்து நீங்க கட்டிடத்தை பாவிக்கலாம். ஆம்பளைக்கு ஒரு தோட்டியும், பொம்பளைக்கு ஒரு தோட்டியும் முனிசிபாலிட்டியிலிருந்து வருவாங்க.'' என்றார்.

தலைவர் வந்து தண்டாராப் போட்டு ஊர் சொல்ல சொல்லிவிட்டார்.

 தண்டாராவைக் கேட்டதும்தான்,ராத்திரியெல்லாம் தூக்கமேயில்ல. காலையில எழுந்திருச்சி நேரா புது எடத்துக்கு போயிட வேண்டியதுதான். எப்போ மணி காலை ஆறு ஆகும்ன்னு படுக்கையில ஒவ்வொருத்தரும் புரண்டுக்கிட்டு இருந்தோம்.

ஆலைச் சங்கு ஊதினதுதான். நாங்க எல்லோரும் சொல்லி வெச்சா மாதிரி  ஒவ்வொருத்தரும் தனித்தனியா வேகமா போனோம். எங்களுக்கு முன்னாடியே ஒரு நீண்ட வரிசை.

ஆம்பளைங்க ஆறு அறைக்கதவு முன்னாடியும் ஆறு வரிசை. பொம்பளைங்க ஆறு அறைக்கதவு முன்னாடியும் ஆறு வரிசை. எங்களுக்கு முன்னாடி ஒருத்தர் போனார். கதவைத் தாப்பாள் போட்டார். பத்து நிமிஷம் கழிச்சும் ஆளு வரல.

அவர் ஒத்த வயசுள்ள ஒரு ஆள், ''ஏய் என்னடா அங்கப் பண்ணிட்டு இருக்க. நல்லா சுகமா தூங்கறியா? சீக்கிரம் வாடா'' டொக்..டொக்கென்னு கதவைத்தட்டினார்.

எரிச்சல் தாளாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

''என்னடா உள்ளார இவ்வளவு நாழி செஞ்சுகிட்டு இருந்த.'' ''அட நீ ஒன்னுப்பா,நானும் முக்கு...முக்குன்னு தம்கட்டி முக்கிட்டேன். ஒன்னும் வரல. நம்பளுக்கு இதெல்லாம் ஒன்னும் சரிப்பட்டு வராது. பழைய எடத்துக்குத்தான் போகணும்பா.'' சொல்லிவிட்டு விர்ரென்று வயல்பக்கம் நடையைக் கட்டினார்.
அடுத்தவர் போனார். போனதும் வழுக்கி விழுந்து முட்டியைப் பேத்துக் கொண்டு வேகமாக முனகிக் கொண்டு வெளியே வந்தார்.

நாங்களும் ஒருத்தர் பின்னால் ஒருத்தர் போக. எங்களுக்கும் அவர்கள் மாதிரி  ஒரு சங்கடம்.

நாங்கள் மட்டுமா அப்படி.பொம்பளைங்களும், '' அடீ! இது ஒன்னும் சா¢ப்பட்டு வராதுடி. கால இந்த அளவுக்கு அகலமா விரிச்சுக்கிட்டு ச்சே... இதுக்குப் போய் இப்படி நீட்டிட்டு நிக்கறீங்க. எப்போதும் போல எருக்கஞ்செடி பக்கத்துல ஒதுங்கிட்டு போங்கடி.'' என்று சொன்ன்வர் வேகமாக குப்பை மேட்டுப் பின்புறம் உள்ள எருக்கஞ்செடி மறைவில் போய் ஒதுங்கினார்.

 கீழ்ச்சாதிக்காரன் ஒதுங்கக்கூடாது. பக்கத்து ஊர் சேரிக்காரங்க பாவிக்கிறானுங்க எங்க ஊர்காரங்களும் பாவிக்கனும் என்று அகங்கார கௌரவ பிரச்சனையால் கட்டப்பட்ட கட்டிடம் பின்பு யாரும் பாவிக்காமல் கதவையும் கானையும் (தண்ணீர் குழாய்) கழட்டிட்டுப் போனது போக. அம்போவென்று அனாதையாக பாழடிஞ்சு போயிருந்ததுல தெரு நாய்ங்க ரெண்டுக்கு போறதும் தங்களுடைய இனவிருத்தியைப் பெருக்கறத்துக்குமா பயன்பட்டுட்டு இருந்தது.


Saturday, June 11, 2011


முதலிரவில்


அன்று அவளுக்கு முதல் ராத்திரி. நாணிக்கோணி தலை குனிந்து மெல்ல மெல்ல அன்னம் போல எவர்சில்வர் சொம்பு ததும்ப பசும் பாலை எடுத்துக்கொண்டு கட்டின் மேல் அமர்ந்துள்ள அவள் அத்தானுக்கு பின்னால் முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு அமைதியாக வந்து உட்கார்ந்தாள்.
ஐந்து நிமிடம் ஆகியது. பத்து நிமிடம் ஆகியது. பதினைந்து நிமிடம் ஆகியது. என்ன இந்த ஆள் மரக்காட்டையா? வந்து எவ்வளவோ நேரமாகியும்  தீண்டவில்லையே என்று அவளுக்குள் சந்தேகம். அப்போதுதான் சற்று பொறுமை இழந்து மெல்ல கணைத்தாள்.

"கணைச்சது போதும். நாம்ப ஒன்னும் புதுசா பழகினதில்ல. நீயும் நானும் இந்த காடு நெலம் வாய்க்காவரப்ப சுதி ஓடி புடிச்சு விளையாடியது இந்த ஊருக்கே தரியும். உன் அப்பனும் என் அப்பனும் 20 ஆயிரத்த கல்யாணப்பரிசு கடனா என் தலையில வெச்சுட்டு போயிருக்காங்க. அந்தக் கடன அடைக்கிறதுக்கே ஒரு வருஷமாயிடும். வந்த பணத்துல பாதிக்கடன குடுத்துடலாம்ன்னா கனவிலே இருக்கேன். பிரிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் யார்.. யார் எவ்வளவு வெச்சு இருக்காங்கன்னு. இதெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். இந்த நோட்டப்புடி. இந்தப் பையில இருக்கிறது எனக்கு வந்த பணம் அந்த பையில இருக்கிறது உனக்கு வந்தது.''

அதுவரை மவுனம் காத்திருந்தவள் வெடுக்கென்,'' எனக்கு வந்தப் பணத்தை நீ எப்படி எடுக்கலாம்?'' என்றாள்.


'' அடிச்செருப்பால. உங்க அப்பன் எனக்கு ஒன்னும் போடல. சைட் அடிச்சதனால அதான் சாக்குன்னு என் தலையில் ஒன்னக்கட்டி வெச்சுட்டான். மரியாதையா நான் சொல்றத எழுது'' என்று சற்று கோபமாக பேசப்போக. உடனே அவள்,'' அப்ப என்ன உண்மையா காதலிக்கலையா? என்று சிணுங்க.'' யார் சொன்னது? இப்போ அதெல்லாம் பேசறதுக்கு டைம் இல்ல. சிணுங்கறத விட்டுட்டு பேசாம நான் சொல்ற்த எழுது'' என்று சொல் அவள் சிணுங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

முணுமுணுத்துக்கொண்டே பேனாவை எடுத்து எழுத ஆயத்தமானாள். அன்பான அத்தான் கவரைப்பிரித்து படிக்கத் தொடங்கினான்.

''தேர் முட்டி தேவராசு ரூபாய் 25. குத்துக்கட்டை கோபாளு ரூபாய் 50. சைக்கிள் செயின் சின்னராசு ரூபாய் 20. முண்டியம்பாக்கம் முனியம்மா ரூபாய் 30.இப்படியாக மைக்கில் சொல்வது போல் முதல் இரவு கட்டில் அவன் ஒவ்வொரு கவராகப் பிரித்து வாசிக்க அவள் எழுத மணி 12 ஆகிவிட்டது.

''முதல் ராத்திரிக்கு அவனவன் என்னென்னமோ செய்வானுங்க. இந்த முண்டம் மொய்ப்பணத்தை நடுராத்திரியில எழுத சொல்லுது. எல்லாம் என் தலை விதி'' என்று கொட்டாவி விட்டபடி முறைக்க,

''என்னடி நான் பாட்டுக்கும் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு என்னையே முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்க'' என்று அதட்ட, ''உம். சொல்லுங்க'' என்று வள்ளுன்னு விழுந்ததும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கவரைப் பிரித்து படிக்கத் தொடங்கினான்.

. ''மாரியாத்தா ரூபாய் 100. பாய் கடை பஷீர் ரூபாய் 15.'' இப்படியே சொல்லிக்கொண்டே மாமனார் சைடு வந்த பணத்தை கவுன்ட் பண்ணச்சொன்னான்.

'' 5000 ரூபாய்'' என்று கூட்டி அவள் சொன்னதும்.


'' நான் எதிர்பார்த்தது 10,000 ரூபாய். வந்தவங்க எல்லாம் இருபதும் முப்பதும் வெச்சுட்டு வயிரு முட்ட சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. இவுங்க அவுங்க வீட்டு விசேஷத்துல வெச்சாத்தானே அவுங்க திருப்பி வைப்பாங்க. ம்.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான். என் வூட்டு சைடு பைய எடு.'' என்றதும்,

''மாமா.'' என்று கண்ணை கசக்கினாள்.

''அடச் சீ. சூட்டோட சூடா சீக்கிரம் எழுது. விடிஞ்சதும் கடனை போய் திருப்பி
பைசல் பண்ணனும்'' என்றதும்

''ம்.. சிணுங்கி கொண்டே எழுதுகிறாள் அவன் சொல்ல சொல்ல. கடைசியாக மொத்தமான ஒரு கவரைப்பிரித்தான். அதிலிருந்து ஒரு கடிதம். அதை எடுத்துப் படித்தான். சைல்ன்ட்டா அதை அவளிடம் கொடுத்து படிக்கச் சொன்னான். அவளும் வாங்கிப்படித்தாள்.

'' புதிய தம்பதியினருக்கு. இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தும் அப்பாவு செட்டியார். தம்பி உங்க அப்பா ஆறு மாசத்துக்கு முன்னாடி 600 ரூபாய் கடனா வாங்கினாரு. இதுவரைக்கும் வட்டியும் தரல அசலும் வரலை. நீங்க படிச்சவங்க நாணயமானவங்கன்னு தெரியும். அவர் கொடுக்க வேண்டிய வட்டிப்பணம் 50 ரூபாயை எனது கல்யாண வரிசையாக நீ எடுத்துக்கொண்டு. அசலான 600 ரூபாயை தற்போது உங்களுக்கு வந்திருக்கும் மொய்ப்பணத்திலிருந்து எடுத்து கொடுத்து பைசல் பண்ணவும்.

அன்புடன் வாழ்த்தும் அப்பாவுச் செட்டியார்.''

படித்துக்கொண்டே விழுந்து விழுந்து சிரிக்க.. பக்கத்து வீட்டு சேவல் கூவியது.

- ஆர். மணவாளன் 

சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்


சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்



நம் ஊர் அய்யனார் கோயில்களில் சுடு மண்ணால் செய்து வைக்கப்பட்ட போர் வீரர்கள், குதிரைகள், நாய்கள் போன்று சீனாவில் இறந்த அரசர் மற்றும் வீரர்களின் நினைவாக மண்ணால் செய்யப்பட்ட டரக்கோட்டா சிலைகள் 1974ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

லீஷான் மலைக்கு கிழக்கே சியான் ஷான்சி பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் தண்ணீருக்காகக் கிணறு தோண்டும் போது இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷமான் டரக்கோட்டா படை வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்தார். இத்தகவலை அறிந்த சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவ்விடத்தை அகழ்ந்து தோண்டினர். அதில் மூன்று நீளமான குழிகளில் 1800 டரக்கோட்டா சிலைகளாக படைவீரர்கள், 130 ரதங்கள், 520 குதிரைகள், 150 போர்க்குதிரைகள் போன்றவை வெளி உலகுக்கு தரிந்தது.

இவையாவும் சீனாவின் முதலாவது பேரரசனான குய்ன் ஷி யுவாங்கின் கல்லறைக்கு அருகாமையில் இருந்தது. ஒவ்வொரு சிலையின் உயரமும்
6 அடியிலிருந்து 6.5 அடி உயரம் வரை உள்ளது. இந்த உயரம் யாவும் படைவீரர்களின் தகுதிக்கு ஏற்ப உள்ளது.

படைவீரர்கள், குதிரைகள், ரதங்களைத்தவிர உயர் அதிகாரிகள், கழைக் கூத்தாடிகள்,வலிமை பொருந்திய மனிதர்கள், இசை விற்பன்னர்கள் போன்றவர்களும் உண்டு. அத்துடன் பேரரசரின் உடலைப் புதைத்த இடமும் தோண்டி எடுக்கப்பட்டது.

சீனாவின் வரலாற்று ஆசிரியரான சிமா குய்ன் என்பவர் இந்த மசோலியம் என்று சொல்லக்கூடிய கல்லறையைக் கட்டுவதற்கான கட்டுமானப்பணி கி.மு.246ல் தொடங்கினார். இப்பணியில் சுமார் 7 லட்ச்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இக்கல்றையை கட்டத் தொடங்கும் போது குன் ஷி குவாங்கிற்கு வயது பதின்மூன்று.

கி.மு.209-210ம் ஆண்டில் வாழ்ந்த சீனாவின் முதலாம் பேரரசர் குய்ன் ஷி குவாங்க் இறந்த போது அவருடன் இந்த டரக்கோட்டா படைவீரர்களும் புதைக்கப்பட்டனர். முதலாம் மன்னன் குய்ன் அப்படைக்குத் தலைமை தாங்குவது போலவும் அவரைப் படைவீரர்கள் பின்தொடர்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை மன்னர் இறந்துவிட்டாலும் அவருக்குத் தொண்டு செய்வது இந்தப் படை வீரர்களின் கடமையாகும். இவர்களக் குய்ன்ஸ் படைவீரர்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த மண் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் லீஷான் மலையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அகழ்வாராய்ச்சியின் போது இந்தப் படை வீரர்களுக்கு அருகாமையிலேயே பேரரசரின் கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)


கபிலர் குன்று


கபிலர் குன்று



மன்னன் மலையமான் வம்சத்தினர் சங்க காலத்தில் திருக்கோயிலூர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர்.

இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் கபிலர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நெருங்கிய நண்பராவார். முடியுடை மூவேந்தர்கள் பாரியையும் அவன் ஆண்ட பரம்பு நாட்டையும் முற்றுகையிட்டு அழித்துவிட பாரி வள்ளல் தன் இரு மகள்கைளையும் கபிலரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டான். 

  
அதன் பிறகு கபிலர் தனது நண்பரின் மகள்களைத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்த இடம்தான் திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் நடுவே உள்ள சிறு குன்றாகும். இக்குன்றே கபிலர் குன்று என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அக்குன்றின் மேல் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இக்குன்றின் உச்சியை அடைய ஒருவர் மட்டும் செல்லக்கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை திருக்கோவிலூர் வீரட்டாணத்தில் உள்ள இராஜராஜன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)


Saturday, April 23, 2011

மூழ்கிப்போன இலேமூ ரியா






மூழ்கிப்போன லெமூரியா


தென்குமரியைச் சுற்றியள்ள இந்துமாக் கடல் ஒரு காலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்றால் ஆச்சரியமாக உள்ளதா? இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அத்தான் நிஜம்.

இந்த மாபெரும் நிலப்பரப்பு தென் அமரிக்காவிலிருந்து ஆஸ்திரியா வரை பரவியிருந்தது. இப்பகுதி திராவிடர்களின் பூர்வீகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த மாபெரும் நிலப்பரப்பே இலெமூரியா கண்டமாகும். சுமார் 18 கோடி வருடங்களுக்கு முன் இப்பகுதிகள் அடர்ந்த காடுகளாக விளங்கின.

வரலாற்று ஆய்வாளர்களான எர்னஸ்ட் ஹெக்கல், எட்வர்ட் சூயஸ்,ரிச்சர்ட் லீக்கி மற்றும் வால்ட்டர் ராலே ஆகியோர் இப்படிக் கூறுகின்றனர்:

முற்காலத்தில் இந்துமா சமுத்திரம் ஒரு பெரும் கண்டமாக இருந்தது. பின்னர் அது கடல்கோளினால் மூழ்கி இருக்க வேண்டும். அந்தக் கண்டமே இலெமூரியா கோண்டுவானாவாகும்.

இதே கருத்தை சங்கத் தமிழ்ப் புலவர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களான பி.டி.சீனிவாச அய்யங்காரும் உறுதிபட தெரிவித்துள்ளனர்:

முற்காலக் குமா¢க்கண்டம் (இலெமூரியா) இன்றைய கன்னியாகுமா¢க்குத் தெற்கிலும் கிழக்கிலும் பெரும் நிலப்பகுதியாகப் பரந்து விரிந்து கிடந்ததென்றும்: அப்பகுதியில்தான் மனித இனம் தோன்றியது என்றும் உறுதிப்படுத்தப்படுகிறது. இது போன்ற பல ஆதாரங்களோடு இலெமூரியாகண்டம் தென் ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமரிக்கா வரை நீண்டு இருந்தது என்பது புலனாகிறது.

கி.மு.20,000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் முன்னோடியாக வாழ்ந்த இப்பகுதி மக்கள் திராவிடர் என்றழைக்கப்பட்டனர்.

மறைந்து போன இலெமூரியா மூன்று பிரிவுகளைக் கொண்டது. தென் இந்தியாவின் மேற்குப்பகுதியில் பெரும் நிலப்பரப்பும் மலைத் தொடரும் ஆப்பிரிக்காவை தொட்டிருந்தது. தற்போது எஞ்சியிருப்பது மடகாஸ்கர் மட்டுமே. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்துதான் ப·றுளி நதி, குமரி நதி என்ற இரண்டு நதிகள் ஆஸ்திரேலியா கடற்பகுதி வரை நீண்டுச் சென்றன.

இதற்குச் சான்றாகப் புறநானூற்றில் (67) குமரியைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. ப·றுளி ஆற்றைப்பற்றியும் புறநானூறு (9) சொல்லப்படுகிறது. 

பாண்டியப் பேரரசு தெற்கே உள்ள இலங்கையையும் தாண்டிப் பல மைல்கள் வரை வி¡¢வடைந்திருந்தது. இந்தப் பேரரசுக்கு உட்பட்டு பெருவளி நாடு மற்றும் ஒளி நாடு என்ற இருநாடுகள் இருந்ததாகத் தமிழ் வரலாற்றுர்; செய்திகள் கூறுகின்றன.

இதற்குச் சான்று. இலங்கை நூலான இராஜ வழி என்ற நூல் தொகுப்பில் கி.மு.300-ஐ ஒட்டி ஏற்பட்ட ஒரு கடல் கோளில் இலங்கை செலானியா நாட்டில் ஒரு லட்சம் பட்டணங்களும், 970 மீனவக் கிராமங்களும், 400 முத்துக்குளிக்கும் (துறை) ஊர்களும் ஏற்கனவே இருந்து அவை அழிந்ததாகக் கூறுகின்றது.

தென் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ்,இந்தொனேஷியா, கம்போடியா,சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகள் இலெமூரியாவுக்கு உட்பட்டிருந்தது. பாண்டியப் பேரரசின் காலத்தில் தொடங்கப்பட்ட முதல் சங்கம் இடைச்சங்கம் இக்காலக் கட்டத்தில்தான் என ஆய்வாளர்கள் தரிவிக்கின்றனர். இதற்குச்சான்று இறையனார், அடியார்க்கு நல்லார் போன்ற உரை ஆசிரியர்கள் குமா¢க்கண்டத்திலிருந்த நாடுகள் பற்றியும் தமிழ்ச் சங்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். (சிலப்பதிகாரம் 8-2-11-18-20)

இளம்பூரணாரும் க்டல்கோளைப்பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச்சங்கங்கள் தோன்றிய பண்டையப் பாண்டிய பேரரசு எங்கே? ஆஸ்திரேலியா முதல் ஆப்பி¡¢க்கா வரை நீண்டிருந்த மாபெரும் நிலப்பரப்பு எங்கே?ஆஸ்திரேலியா வரை பாய்ந்து சென்ற் ப்·றுளி நதி மற்றும் குமரி நதி எங்கே?இதற்குப் பதில் அடுத்தடுத்ததாக நிகழ்ந்த கடல்கோளேயாகும்

முதல் கடல்கோளின் போது இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்திருந்த நிலப்பரப்பு முற்றிலுமாக மூழ்கிவிட்டது. இதனை அலெக்சாண்டர் கோந்ரவதோவ் என்ற ஆய்வாளர் கூறியது போல இதற்குமுன் தென் அமரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இருந்தன.

இரண்டாவது கடல் கோள் நிகழ்ந்த போது கண்ட நகர்வு ஏற்பட்டு தென் இந்தியாவின் பெரும் பகுதி மூழ்கிப் போனது. இதற்குச்சான்று,கடலின் போ¢ரைச்சலில் மலையே அசந்தது என்கிறது குறுந்தொகை (52).

மூன்றாவது கடல்கோளின் போது தென்கடல் தீவுகள் தென்பாலி நாடு ஆகியவை மூழ்கிப்போயின. இதில் எஞ்சியுள்ள நிலப்பரப்பு தற்போது சிறு சிறு தீவுகளக இருக்கின்றன. அதில் இலங்கையும் ஒன்றாகும்.

பாண்டியனின் பெருநிலத்தைக் கடல் தனது அலைகளால் கவ்விக்கொண்டது என்கிறது கலித்தொகை (104). பெரும் நாடுகளையும் காடுகளையும் நதிகளையும் சிறந்த திராவிடர் கலாச்சாரத்தையும் கொண்ட இலெமூரியா, அடுத்தடுத்து நிகழ்ந்த கடல்கோளினால் முற்றிலுமாக மூழ்கிவிட்டது.

தென் கோடி கடற்பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்தால் முற்றிலுமாக மூழ்கிவிட்ட இலெமூரியாவைப் பற்றி பல அரிய செய்திகள் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆர்.மணவாளன் எழுதிய உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து ...

Tuesday, March 1, 2011

அரிக்கன் மேடு ஒரு வணிகத் தளம்





                 அரிக்கன் மேடு ஒரு வணிகத் தளம்

புதுச்சேரியிலிருந்து கடற்கரை வழியாக தெற்கே சுமார் 3கி.மீ. தொலைவில் உள்ளது வீராம்பட்டினம் என்னும் சிற்றுர். அவ்வூரிலிருந்து மேற்கில் காக்காயத்தோப்பு என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து வடமேற்கில் சிறு காட்டுப்பகுதி போலக் காணப்படுவதுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அரிகன்மேடு.இப்பகுதியை ஒட்டியே செஞ்சியாறு கடலில் கலக்கின்றது. இப்பகுதி ஒரு காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் த்ங்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்து பிரசித்திப் பெற்ற வணிகச் சந்தையாக அமைந்திருந்தது என்றால் ஆச்சரியமாக உள்ளதா?  ஆச்சரியப்படத்தேவை இல்லை. அவர்கள் இங்கு தங்களுடைய வணிகத் தளங்களையைமைத்து நம்முடன் வர்த்த்கம் செய்தன்ர். அதுமட்டுமல்ல ந்மது நாகரிகமும் அவர்களுக்குச் ச்மமாகத்தான் இருந்து வந்துள்ளது.


கி.பி.60ல் வாழ்ந்த பெரிபுளூஸ் என்ற யவன ஆசிரியர் தனது கடற் பயணக்குறிப்பில் சோழ மண்டலத்தில் கப்பல் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக கமரா ( காவிரிபூம்பட்டினம்), பொதுக்கே (புதுச்சேரி), சோபட்டினம் (மரக்காணம்) ஆகிய துறைமுகங்கள் இருந்து வந்தன என்றும் இதில் பூம்புகாரும் புதுச்சேரியும் சரிசமமாக்க் கடற் வாணிகத் தளமாக விளங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்துறைமுகத்தை கி.பி.1700இல் தெபேர் (De Fer)  வெளியிட்ட தேசப்படத்தில் காணலாம். இப்பகுதியில் அடிக்கடி புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரி பேராசிரியர் ழுவோ டுய்ப்ரேய் அவர்கள் கடற்கரை ஓரமாக உலாவுவது வழக்கம். அப்படி அப்பகுதிக்குச் செல்லும் போது சிறுவர்கள் அவரிடம் அன்பாகத் தந்த சிறு சிறு வண்ண மணிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அதில் ஒன்று அகஸ்ட்டஸ் மன்னனின் தலை பொறிக்கப்பட்ட மணியாகும். இதுவே இவருக்கு இப்பகுதியை அகழ்ந்து பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது. உடனே இது சம்பந்தமாக அப்போதைய பெத்தி செமினேர் கல்லூரியில் பணியாற்றிய பாதிரியார் லெபொஷோவுடன் கலந்து பேசி ஆராய்ச்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள்.


அதன் பிறகு 1937ஆம் ஆண்டு இந்திய அகழ்வாராய்ச்சித்துறை முதல்வர் மார்ட்டி மேர் வீலர் தலைமையின் கீழ் ஏ.கே.கோஷ் மற்றும் கிருட்டின தேவர் ஆகியோர் இங்கு வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய ஜாடி, சில்லுகள் கண்ணாடி விளக்குகள், புஷ்பராகம், சிவப்புமணி, படிகம், முத்துக்கள், கோமேதகம், திராட்சை மது ஜாடிகளின் உடைந்த ஓடுகள் மற்றும் முதலாம் நூற்றாண்டு இத்தாலி நாட்டு பளபளக்கும் சிவப்பு ஜாடிகளின் ஓடுகள் கிடைக்கப் பெற்றன. இவையாவும் கிரேக்க ரோமானியர்களின் வாணிகத் தளங்கள் இங்கு தழைத்தோங்கியதற்க்கான ஆதாரப்பூர்வ அத்தாட்சியாகும். அதுமட்டுமல்ல சங்கால் செய்யப்பட்ட வளையங்கள், மிளகு, பட்டை தீட்டிய கற்கள் மற்றும் சாயம்தோய்ந்த மெல்லிய துணிகள் இங்கிருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக அங்கிருந்து திராட்சை மது,செப்பு, தங்கக் காசுகள் போன்றவை இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல துணிகளுக்குச்சாயம் தோய்க்க இங்கு சாயப்பட்டறைகள் பல இருந்ததற்க்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அ¡¢க்கன்மேடு பிரசித்திப் பெற்ற வணிகத்தளமாக விளங்கியதால் கிழக்கு ஆசிய நாடுகளான இந்து சீனா (இந்தோனேஷிய) ஜாவா, சுமத்திரா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் நடைபெற்றது. அத்துடன் சமணர்களும், புத்தகுருமார்களும் தங்கள் மதக் கொள்கைகளை பரப்பி வந்ததற்கான ஆதாரங்களும் இங்குள்ளன. பேராசிரியர் துய் ப்ரேய் தனது ஆராய்ச்சியின் போது வீராம்பட்டினத்தின் எல்லைப் பகுதியான காக்காயந்தோப்பு பகுதியில் புத்தர் சிலை ஒன்றைக் கண்டெடுத்தார். இது அக்காலத்தில் புத்த மதத்தினர் நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் கட்டி வழிப்பட்டது போல் இங்கும் புத்தர் கோயில் கட்டி இந்து சீன புத்தகுருமார்கள் வழிபட்டனர் என்பதற்கு உறுதியான ஆதாரமாகும். தற்போது அப்பகுதி மக்கள் வழிபட்டுவரும் விருமர் சிலை இக்கோயில் சிலையேயாகும். புத்தருக்கு இன்னொரு பெயர் சாக்கியான் என்பதாகும். தோப்பு சூழ்ந்துள்ள இந்தப் புத்தர் கோயில் சாக்கியன் தோப்பு ஆகி நாளடைவில் சாக்கியான் தோப்பு காக்காயந்தோப்பாகியது என்பது வரலாறு.



இதே கருத்தை லெ ழாந்தீய் (Le Gentil 1769 இல் தன் பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அ¡¢க்கன் மேட்டில் பாழடைந்த ஓர் கட்டிடம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இது இடைக்காலத்தில் அதாவது வெள்ளையர்கள் நம்மை ஆண்டு வந்த சமயத்தில் மதத் தத்துவக் கழகம் என்ற ஒன்றை 1770-ஆம் ஆண்டு அவர்கள் நிறுவியிருந்தனர். இங்கே தான் தவத்திரு அத்ரான் பாதிரியார் என்ற பிஞ் ஞொ தெ பெயேன் (Pigneu de Behaine) என்பவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொட்டல் காடாகக் காட்சியளிக்கும் இந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடத்தை அகழ்வாராய்ச்சியினர் மீண்டும் தீவிர ஆராய்ச்சி நடத்தினால் மறைந்து போன பண்டைய வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

ஆர்.மணவாளன் எழுதிய உலக அதிசாயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து ... 

Tuesday, February 22, 2011

மனக்கணக்கு




மனக்கணக்கு
(சிறுகதை)

அவனும் அவளும் ஒரு கைலாங்கடை துணி சோப்புக் கம்பெனியில் வேலை செய்து வந்தார்கள். அந்த சோப்பு கம்பெனிக்குச் செல்ல இரண்டு பஸ் ஏறி இறங்க வேண்டும். அவனாகப்பட்டவன் மேனேஜர் கம் லீகல் அட்வைசராக மாதம் ரூபாய் ஐய்யாயிரத் திற்கும்.அவளாகப்பட்டவள் சேல்ஸ் கேர்ளாக பத்தோடு பதினொன்றாக மாதம் ஆயிரத்து ஐனூற்றுக்கும் ஊர் ஊராக.வீடு வீடாக ஏறி இறங்கி தங்கள் கம்பெனி சோப்பின் புகழை செய்முறை பயிற்சி மூலம் விளம்பரப்படுத்தி வந்தாள்.

ஐந்து வருடத்திற்க்கு முன்னால் இந்த கம்பெனி சோப்பும் செங்கல்லும் ஒன்று. செங்கல்கூட தண்ணீரில் போட்டால் கரைந்துவிடும். ஆனால் இந்தக் கம்பெனி சோப்போ அப்பேர்ப்பட்டதல்ல, சுத்தியால் அதன் தலையில் ஓங்கிப் போட்டால் கூட சுக்கு நூறாகாது. அவ்வளவு ஸ்திரத்தன்மை வாய்ந்தவை. 

இவன் மேனேஜராகப் பதவி ஏற்றதும், குல்மால் பண்ண பார்முலாவை ஓரங்கட்டிவிட்டு சிறந்த கெமிஸ்ட்டின் உதவியுடன் புதிய பார்முலாவை உபயோகித்து நடுத்தர மற்றும் ஏழை ஏளியவர்கள் சோப்பை குறைந்த விலையில் உபயோகிக்கும் அளவுக்கு உருவாக்கினான்.

ஐந்து சேல்ஸ் கேர்ளாக இருந்தது தற்போது பதினைந்தாக உயர்ந்து, அவனுடைய பாஸ் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு இரண்டு ப்ரான்ச் திறக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.  
ஆரம்ப காலத்தில் பாஸும் இவனும் ரொம்ப அன்னியோன்னியமாக இருந்தார்கள். அவனுக்கு ஒர்க்கிங் பார்ட்னர்ஷிப் ஷேர் கொடுப்பதாக ஆசைக்காட்டியவர். இன்று வியாபார நேக்கு போக்கு எல்லாம் அவனிடமிருந்து கற்றுக் கொண்டு இவனை கல்த்தா கொடுப்பதற்காக ஏதாவது அவனிடத்தில் குற்றம் குறை கண்டு கம்பெனியைவிட்டு நீக்கி தானே கம்பெனி முழு பொறுப்பையும் ஏற்கத் திட்டமிட்டிருந்தார்.

இவன் வக்கீலுக்குப் படித்துள்ளதால், ஏதாச்சும் சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பினால் ஏடா கூடமாக மாட்டிக்கிட்டு பிற்பாடு அவதிபடும்படி நேரிடுமோ என்று உள்ளுக்குள் பாஸுக்கு கொஞ்சம் பயம்கூட இவனிடத்தில் உண்டு.
  
இவனும் லேசுப்பட்டவன் அல்ல. வந்த சண்டையையும் விடமாட்டான் வம்பு சண்டைக்கும் போகமாட்டான். மாட்டி இழுக்கக் கூடிய திறமையுண்டு.

பாஸ் பொண்டாட்டிக்கு ஒரு நல்ல குணம். எந்த ஒரு சேல்ஸ் கேர்ளாவது தன்னைவிட அழகா இருந்தாள் என்றாள் அவ்வளவுதான். அப்பேர்ப்பட்டவளை எப்படி வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்புவது என்று தீவிரமாக யோசித்து அனுப்புவாள். தன் கணவர் மண்டையிலே ப்ளே கிரவுண்டா இருந்தாலும் வேலை செய்யற எவளையாவது சின்ன வீடா செட்டப் பண்ணிவிடுவானோ என்று அவளுக்குக்ப் பயம்.

அதற்காகவே இண்டர்வியூ வைத்து செலக்ட் பண்ணும் போது வத்தலும், தொத்தலுமா,உதட்டைவிட்டு பல்வெளியுலகத்துக்கு எட்டிப்பார்க்கிறமாதிரி, பல்லு கொஞ்சம் எடுப்பா, கண் என்னை பார்ன்னா ஏரியப் பார்க்கிற மாதிரி யுள்ள் பெண்களைத்தான் வேலைக்கு அமர்த்துவாள். இதுகூட ஒரு காரணம் சோப்பு கம்பெனி படுத்ததற்க்கு. இவன் வந்த பிறகு இவர்களுடன் புதிய அழகிகளை அமர்த்தி பிஸினஸ் பிக்கப் பண்ணினான். இதனால்கூட இவன் மீது பாஸ் மனைவிக்கு கொஞ்சம் காண்டு வெறுப்பு எல்லாம்.

புதியதாக வந்தப் பெண்களில் அவளாகப்பட்டவள் கொஞ்சம் அழகானவள். நாளுக்கு ஒரு புடவை. இன்ஸ்ட்டால்மென்ட்டில் வாங்கி கட்டக்கூடிய வசதிப்படைத்தவள். கிளியோபாட்ரா மாதிரி கருப்பு. சுருட்டை முடி. சைஸ் கொஞ்சம் உப்பல். அவளை எப்படியும் விரட்ட வேண்டுமென்பதே பாஸ் மனைவியின் குறிக்கோள்.

இப்படியாக இருக்கையில். ஒருநாள் அவளும் அவனும் தனியாக மதிய வேளையில் தனி அறையில் சாப்பிட நேர்ந்தது. கொஞ்சம் தாராளமாக எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவன். அவளும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் அலட்டல் மங்காத்தா. சில வேளைகளில் 70 எம்.எம்.மாதிரி ரீலும் விடுவாள்.

'' சார்.  உங்களுக்கு எப்ப சார் கல்யாணம்?'' கேள்வியை அவள்தான் டிபன் பாக்ஸைத் திறந்து கொண்டே கேட்டாள்.

"இந்த பொட்டிக் கம்பெனியில தூக்க முடியாம தூக்கி 5000 ரூபா தர்றான். அதுவும் மாசம் ரெண்டு இன்ஸ்ட்டால்மென்ட். இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா?'' என்றான் எ¡¢ச்சலாக.

" ஏன் சார். நீங்க இவ்வளவு படிச்சுட்டு இருக்கீங்க. பேங்க்லியோ இல்ல லாயராகவோ போயிருக்கலாமே. இந்த பொட்டிக் கடையில வந்து குப்பை கொட்டிட்டு இருக்கீங்களே" என்றாள்.

"என் தலையில பிரம்மா இப்படி இப்படின்னு எழுதி வெச்சுட்டான். என்ன செய்யறது? சம்பந்தம் சம்பந்தமில்லாதவனுக்குத்தான் பேங்கல வேலை. தமிழ் லிட்ரேச்சர் படிச்சுட்டு பேங்க்கில்ல கைட்டுவான். பி.காம்., எம்.காம் படிச்சுட்டு டைப்பிஸ்ட்டா இருப்பான். கேஸ் கிடைக்காம ஒரு சீனியர் வக்கீலுக்கிட்ட ஒன்பது பேரு வேலை செய்வானுங்க. சாதாரண ரிக்ஸாக்காரன் கூட ஒரு நா¨ள்க்கு கெஸட்டர் சம்பளம் வாங்கறான். வக்கீலுங்க மாசத்துக்கு 1500 ரூபாக்கூட வாங்கறது கிடையாது. இப்படி இருக்குது நம்ப நாட்டுலப் படிச்சவன் தலையெழுத்து" இரண்டாவது கேள்விக்கு மூச்சுவிடாமல் பதிலளித்தான்.

" சரி, ஏதாச்சும் பேங்கில்ல லோன் போட்டு, இதுபோல ஒரு சின்ன கம்பெனி தொடங்கலாம்ல்ல. அதவிட்டுட்டு இந்தப் பொட்டிக் கடை கம்பெனியில வந்து குப்பை கொட்டிட்டு இருக்கீங்க" என்றாள்.

"என்ன செய்யறதுங்க, பேங்கில்ல லோன் அப்ளைபண்ணா, எம்.எல்.ஏ, மினிஸ்டர், எம்,பி.,ன்னு ரெக்கமன்டேஷன் வேணும்.அதுக்கு கொஞ்சம் அன்பளிப்பு தரணும் அப்புறம் பேங்க் மேனேஜருக்கு கமிஷன் கொடுக்கனும்.50,000 வாங்கினாக்கா 40,000ந்தான் லோன் கெடைக்கும். இதுல நான் ஒரு 30,000 போடனும். எங்க போறது அவ்வளவு பணத்துக்கு?" என்று விரக்தியோடு சொன்னான்.

"ம். இவ்வளவு உழைச்சும் உங்களுக்கு ஒரு நல்ல பேரு கிடையாது" பெருத்த பெருமூச்சுடன் அவனுக்கு ஆதரவாகச் சொன்னாள்.

"என்ன செய்யறதுங்க, செஞ்ச நன்றியை ஒருத்தன் மறக்கறான்னா இந்த உலகம் கூடிய சீக்கிரத்தில அழியப் போகுதுன்னு அர்த்தம். பகவத் கீதையில அப்படித்தான் சொல்லலியிருக்கு" கோமாளித்தனமாக அவன் சொன்னதும்,"மண்ணாங்கட்டி" என்று அழுத்திச் சொன்னாள். இந்த அழுத்தமான வார்த்தையில் ஏதோ இரண்டு மூன்று வருஷம் இவனிடம் அன்னியோன்னியமாக பழகினது போல சொன்னாள். இவள் வாங்கி வந்த மசால் வடையில் பாதியை பரிமாறிக் கொண்டு மீண்டும் தங்களது சம்பாஷணையைத் தொடர்ந்தார்கள்.

"ஆமா, நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. நாங்கல்லாம் நாப்பது வயசு ஆனாக்கூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன் தொன்னு¡று வயசு கிழவனானாக்கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்தை பெத்துக்கலாம். புரூவ் பண்ணியிருக்காங்க" சொன்னதும் க்லுக்கென்று ஒரு சிரிப்பு சிரித்தாள்.வாயில் போட்ட சோறு அவள் மூக்கு வழியாக வெளியே வந்தது.

வெட்கத்தால் புடவை நுனியால் துடைத்துவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பிட்டாள்.

அவன் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

"ஆனா, நீங்க பொண்ணுங்க அப்படியில்ல. நாளுக்கு நாள் மாப்பிள்ளை ரேட் வேறு அதிகமாயிட்டே போகுது. உங்களுக்கு பின்னால எத்தனை பேரு இன்னும் இருக்காங்க"

"நாங்க ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு ஆணுங்க சார்."

"நீங்கதான் பெரியப் பொண்ணா?"

"நான்தான் சார் வீட்லியே பெரியவ?"

"சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, மத்தவங்களுக்கு வழிவிடுங்க. அது சரி. உங்க வீட்ல எத்தனை பவுணு நகை போடுவாங்க உங்களுக்கு?"

"இருபது பவுன் போடுவாங்க சார்"

"80,000 ரூபாயச்சு. கவர்ன்மென்ட்ல ஏதாச்சும் ஒரு வேல வாங்கிட்டு கல்யாணத்தைப் பண்ணிக்கலாமே"

"எனக்கு இந்த ஆம்பளைங்களையே பிடிக்கல சார். இவ்வளவு கொண்டுட்டுவா.அவ்வளவு கொண்டுட்டுவான்னு வரதட்சணை கேட்பாங்க"

"வரதட்சணை வாங்கச் சொல்லி தூண்டறதே உங்க மாதிரி தாய் குலம் தானே.அதுவும் கல்யாணம் ஆனப்பிறகு கிரைண்டர் வாங்கிக்கொடு. மிக்ஸி வாங்கிக்கொடு. டி.வி.வாங்கி கொடுன்னு அவனை அரிச்சி எடுப்பீங்க. அவன் ஒருத்தன் சம்பாதிச்சு பொண்டாட்டி தேவையைப் பூர்த்தி செய்வானா? படிக்க வெச்ச அப்பா அம்மா குடும்பத்தைப் பார்ப்பானா? இந்த காலத்துல நடுத்தர குடும்பத்துல இருக்கறவங்க குப்பை கொட்ட முடியாதுங்க. என்னைக்கும் ஆம்பள மேலேயே குத்தம் சொல்லாதீங்க. இனிமேலயாவது மாத்திக்குங்க" 

இப்படியே காரசாரமாக பேசிக்கிட்டு இரண்டு பேரும் தங்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு கற்பனையில் மிதந்தார்கள்.

"ஆளுக்கிட்ட நல்ல திறமையிருக்கு. கொஞ்சம் இளிச்சவாயன் மாதி¡¢த்தான். ஆசைக்காட்டி அட்ஜஸ் பண்ணி வளைத்துப் போட்டால், படிப்புக்கு படிப்பு. பெர்சனாலிட்டிக்கு பெர்சனாலிட்டி. 20 பவுனும் மிச்சம். நாமும் இவள மாதிரி பாஸாயிடலாம். தம்பி-தங்கைகளுக்கு கல்யாணத்தைப் பண்ணிவைக்கலாம். சொஸைட்டியில நமக்கு ஒரு நல்ல அந்தஸ்த்து கிடைக்கும்" என்று கற்பனையுலகில் சஞ்சரித்தாள். 

அவள் அப்படியென்றால் இவன்,''பார்க்கறதுக்கு கொஞ்சம் மழுமழுப்பான கட்டையாத்தான் இருக்கு. 20 பவுனுகூட கொஞ்சம் கல்யாணத்தை ஓசியில பண்ணி வெச்சா போதும். கல்யாணாம் பண்ற காசை நாம வாங்கிட்டு ஏதாச்சும் ஒரு கோயில்ல தாலிகட்டி ரிசப்ஷன் வெச்சு அதுலேயும் ஒரு அடி அடிச்சுடலாம்.பிறகு நம்ப லைப் செட்லாயிடும். ரெண்டு வருஷத்தில இதுமாதிரி ரெண்டு கம்பெனி உருவாக்கிவிடுவேன்.'' என்று ஏழு குதிரை பூட்டிய கற்பனைத் தேரில் பறந்துச் சென்றான்.

மறுநாள், அவளாகப்பட்டவள். அவனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்து விட்டது."வரதட்சணை வாங்க மாட்டார்.படிப்புக்கு படிப்பு.பெர்சனால்ட்டிக்கு பெர்சனால்ட்டி.20 பவுனும் மிச்சம்.எப்படி என் செலக்ஷன்'' என்று கயிறுவிட்டாள் சகத் தோழியர்களிடம். இது எப்படியோ காற்றுவாக்கில் அவர்களது பாஸ் மனைவிக்கு எட்டியது.

பத்ரகாளி மாதிரி அவனிடத்தில் வந்து தான் கேள்விப்பட்டதை அப்படியே ஒப்பித்தாள்.

அவ்வளவுதான் கேல்குலேஷன் போட்டவன் தலையில் இடி விழுந்தது.

வரதட்சணை வாங்கமாட்டார். படிப்புக்கு படிப்பு.பெர்சனால்ட்டிக்கு பெர்சனால்ட்டி.20 பவுனும் மிச்சம்.எப்படி என் செல்க்ஷன்''இந்த வார்த்தைகள் சினிமா படத்தில் வருவது போல் நான்கு பக்கமும் சுவற்றிலிருந்து எதிர் தாக்குதல் பண்ணி எக்காளிப்பது போல இருந்தது அவனுக்கு. 

இரண்டு நிமிடம் மௌன அதிர்ச்சியிலிருந்தவன் உடனே உத்தம புருஷன் மாதிரி அவளை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினான்.

சிறிது நேரத்தில் அவள் கதவைத்திறந்து,''மே ஐ கம் இன் சார்'' என்று சொல் எட்டிப்பார்த்து உள்ளே வந்தாள்.

"என்ன மிஸ் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.நான் உங்களோடு பேசினது சாப்பிட்டது எல்லாம் ஒரு பிரண்ட் மாதிரி பைத்தியக்காரத்தனமாக ஏதாவது கற்பனை செய்யாதீங்க" என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டான்.

"பாவி. நான் எவ்வளவு கணக்குப் போட்டு கனவு கண்டிட்டு இருந்தேன். இப்படி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டானே. சத்தியமா உருப்படமாட்டான்" என்று தலையைக் குனிந்து கரிந்து கொட்டினாள் அவனை.

பக்கத்தில் இருந்த பாஸ் மனைவி இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி,"எங்க கம்பெனிக்கு நல்ல பொண்ணுங்கதாம்மா தேவை. இதுமாதிரி இருந்தா கம்பெனி பேரு ரிப்பேராகிவிடும். சம்பள்த்தை வாங்கிட்டு நின்னுடுங்க. அதுவுமில்லாம கம்பெனியில நெறைய பேர் இருக்காங்க.கம்பெனி நஷ்டத்தில வேறு ஓடுது" என்று சொல்லி கணக்குப் பண்ணி காசை கையில் திணித்தாள். வாங்கிக் கொண்டு "நல்லாயிருப்பியாடா பாவி. என் கனவில மண்ணள்ளி போட்டுட்டியாடா''என்று மனதுக்குள்ளே கரிந்து கொண்டு விசனத்தோடு சென்றவளை ஓரக்கண்ணால் தலையை நட்டுக் கொண்டு காக்காப் பார்வைப் பார்த்தான். பாஸ் ம்னைவி ஒரு நல்ல காரியத்தை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் அறையை விட்டு வெளியேறினாள்.

(சூரியோதயம் என்ற இதழில் ஆர். மணவாளன் எழுதியது )