Tuesday, January 18, 2011

பொன்மனச் செம்மல்



பொன்மனச் செம்மல்
(சிறுகதை)


 இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பது பொய். கம்யூனிஸ்ட் பொய். சுவாமிகள் பொய். மதங்கள் பொய். சட்டங்கள் பொய். தாய் பொய். தாரம் பொய். வானம் பொய். வாழ்க்கை பொய். ஆனால் அவள்...

                அவள்தான் நிஜம். அவள்தான் உண்மையான இந்தியா. உண்மையான கம்யூனிஸ்ட். அவளிடத்தில் ஜாதி இல்லை. மதம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. ஏழை பணக்காரன் வித்தியாசமில்லை. ஆசையோடு வருபவர்களை அன்போடு கட்டியணைக்கும் உண்மையான தோழி.

                கொடிகட்டி வாழ்ந்தார்கள் என்று சொல்வார்களே. அதுபோல அவள் 1957 ருந்து 1977 வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தாள்.

                அவளைப் பெற்ற புண்ணியவதி யார்? என்று அவளுக்கே தெரியாது. குப்பைத் தொட்டியில் கண்டெடுத்து, யாரோ ஒரு பலான தொழில்புரியும் கிழவியிடம் வளர்ந்து,16 வயதில் பூப்படைந்து, ரிக்ஷாக்காரனால் கட்டாயமாக கன்னிகழிந்து அரங்கேற்றப்பட்டவள். பின்பு டிரைவர்,டாக்டர்,வக்கீல், எம்.எல்.ஏ.மந்திரிகள் என்று அவளது உடம்பை நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவி ருந்து விடியும்வரை அந்தக்கால ஃபியட்டிருந்து இம்பாலா வரை எத்தனை கார்கள் தவம் கிடந்து காத்திருந்தன.

                பொன்மனச் செம்மல் என்று இவளுக்குப் பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கலாம்.ஏனோ இந்த மந்திரிமார்களுக்கு அவ்வளவு ஞாபகமில்லை போலும்.

                தன் சதையை விற்ற கூலியில் எத்தனை குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தாள். தன்னுடைய நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று எண்ணிப் பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழவைத்த பெண்கள்தான் எத்தனை பேர்? நாடி வந்த தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தன் வீட்டிற்கு வரும் அதிகாரிகளிடமும் மந்திரிமார்களிடமும் சொல்லி  அரசுத்துறையில் வேலையில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

                அதெல்லாம் 1957 ருந்து 1977 வரை பிரகாசமாய் வாழ்ந்த காலம்.

                இன்று யாரோ ஒரு புண்ணியவான் பரிசாகக் கொடுத்த நோயினால் படுத்த படுக்கையாக பாழடைந்த பங்களாவில். ஓட்டக்கட்டிலில் கருவாடுபோல வதங்கி மூச்சுக்கூட விடமூடியாமல் திணறிக் கொண்டு இருந்தவளுக்கு ஒரு ஊசியைப் போட்டுவிட்டு வேண்டா வெறுப்பாக, இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்கும் ஏதாச்சும் சொந்தக்காரங்களுக்கு சொல்லனும்ன்னா சொல்லிடுங்க. இல்ல ஏதாச்சும் எழுதி வாங்கனும்ன்னாலும் எழுதி வாங்கிடுங்க என்று சொல்லி விட்டுச் சென்றார் மருத்துவம் பார்த்த டாக்டர்.

    அந்த பாழடைந்த பங்களாவுக்காகவும் தட்டுமுட்டு மரச்சாமான்களுக்காகவும் பங்கு போடக் காத்திருந்த அவள் வீட்டருகே குடியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஸ்டாம்ப் பத்திரத்தோடு தயாராக இருந்தார்கள்.

                சிறிது நேரம் சென்றது. அவள் மெல்ல கண் விழித்தாள். கண்ணெதிரே நால்வர். கண்களில் நீர்த்ததும்ப கைகள் நடுக்கத்துடன் வணக்கம் வைத்தாள்.

                அவள் எதிரே சிறிய ஸ்டூலில் "மியாவ்... மியாவ்" என்றது. அவளது ஆசை மீனாக்குட்டி. நால்வரில் ஒருவன் அதைவிரட்ட அவள் சைகையால் வேண்டாம் என்றாள்.
               
 "காரியம் முடியட்டும். ஒன்ன அப்புறம் பேசிக்கிறேன் என்று சொல்" 

 ஸ்டாம்ப் பத்திரத்தை ஒருவன் நீட்ட, இன்னொருவன் அவள் கைவிரல் மைதடவி பத்திரத்தில் ஒரு அழுத்து அழுத்தி பத்திரமாக சுருட்டி வைத்தான்.

          "டேய், எல்லாம் ஒழுங்கா நாலு பேருக்கும் சமமாத்தானே எழுதியிருக்கு."

            "நாய.  நான் என்ன ஒன்ன மாதிரி திருட்டு பேமானியா?"

    "யாரடா திருட்டு பேமானின்னு சொன்ன. தேவ்டியா பையா" என்று சட்டையைப் பிடிச்சு இழுக்க,

      "டேய்....டேய்... அந்தப் பொம்பளையப் பாருடா" என்று ஒருவன் அவசரமாகச் சொல்ல நால்வரும் அவளை உற்று நோக்குகிறார்கள்.

                "தண்ணி.... தண்ணி...."

        "டேய்... தண்ணிக் கொண்டுட்டு வாடா" என்று ஒருவன் சொல்ல. இன்னொருவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் கேவிக்கொண்டே அவள் உயிர் பிரிந்தது.

         "டேய்... தண்ணி கொடுக்கறதுக்குள்ள. பொம்பள மண்டையப் போட்டுட்டது பாவம்ண்டா"

   "சரி...சரி... விடு ஆக வேண்டியதப் பார்ப்போம். ஏம்பா நீங்கரெண்டுபேரும் மேரியில உத்தரவு வாங்கிட்டு முனிசிபா ட்டி வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரும்போது, மாலை வத்தி பூ பழம் சட்டி எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுங்க நாங்க ரெண்டுபேரும் இங்க ஆக வேண்டியதைக் கவனிக்கிறோம்"

      "எல்லாம் இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும். ஊர்ல நாலுபேர் கூட்டி வாங்கப்பா. நாங்க கௌம்பறோம்" சொல்லிவிட்டு இருவர் வெளியேர, இன்னொருவன் வீட்டின் வெளியே வந்து,

     "மொதலியாற, பொம்பள மண்டையப் போட்டுட்டது. கொஞ்சம் காரியத்துக்கு வர்ரீங்களா?"

     "அவ பொறப்பு என்ன? கோத்ரம் என்ன? உடம்ப வித்தவளுக்கு என் வூட்டுக்காரரு வருவாராக்கும். அதுக்கு, வேற ஆளப் பாருங்கடா. நீங்க உள்ளப் போங்க சொல்றன்" ஆம்படையான உள்ளே தள்ளிக்கிட்டுச் சென்றாள்.
                
"மொத யாரூட்டமா, ஒன் புள்ளைக்கு ஆபீஸ் வேலைக்காக இந்த பொம்பளக்கிட்ட நடையா நடந்தது மறந்து போச்சாக்கும் தூத்தாரி என்னாடா உலகம்?"

  "நாமத்தான் நாலுபேர் இருக்கோமே இன்னும் எதுக்கடா? பேசாம ஆகவேண்டியதைப் பார்ப்போம்.பேமானி ஜெனங்க எவனக் கூப்பிட்டாலும் வரமாட்டானுங்க. பெரிய கவுரவ மயிறுப் பார்ப்பானுங்க. இதுக்குத்தாண்டா சொல்றது. சாவரகாலத்துல கொஞ்சம் சொத்துப்பத்து இருக்கனுங்கறது. அப்படி இருந்தாத்தான் எங்க கெடக்கிற எச்செல நாய்ங்கெல்லாம் வரும்" சொல்லிவிட்டு காரியத்தைத் தொடங்கலானார்கள்.
                
    சரியாக ஒருமணி நேரம் சென்றது. உயிராக இருக்கும் போது எந்த மனித ஜென்மங்கள் அவள் சதையை ருசிப் பார்த்தார்களோ; அதே சதையை உயிர் பிரிந்தபோது ஈக்கள் கூட்டமாக வந்து மொய்த்தன.

        முனிசிபாலிட்டியி ருந்து சவவண்டி வந்தாகிவிட்டது. ஒருவன் ரோஜாப்பூ மாலை,ஊதுபத்தி,தேங்காய்,பழம், சட்டி, முறம் ஆகியவற்றுடன் வந்தான்.

                இன்னொருவன் வீட்டில் உள்ள பழைய காலத்து ட்ரங் பெட்டியைத் திறந்து நல்ல புடவை ஒன்றை எடுத்து அவள்மேல் போர்த்தி ரோஜா மாலையை கழுத்தில் போட்டு சரி செய்தான்.
                
சவ வண்டியை அலங்கரித்தவன், "எல்லாம் ரெடியாச்சு. தூக்குங்கப்பா" என்றான்.

அவளை நால்வரும் தூக்கிக்கொண்டு வண்டியில் வைத்துவிட்டு,ஒருவன் முன்னால் பிடித்து இழுக்க.பக்கவாட்டில் இருவர், பின்னால் ஒருவன் தள்ள, அவளுடைய பிரேதம் சுடுகாட்டை நோக்கிப்புறப்பட்டது. கூடவே "மியாவ்... மியாவ் ..." என்று வழிநெடுகக் கத்திக்கொண்டே வந்தது அவளுடைய செல்லப் பிராணி மீனாக்குட்டி.
                
இருபுரமும் குடித்தனக்காரர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து பட்டென்று கதவைப் பூட்டியவர்களும் உண்டு. உத்தமி போல் பேசிய பத்மனிமார்கள் வண்டியைப் பார்த்து வீட்டிற்குள் மறைந்தவர்களும் உண்டு.

                சவ வண்டி சுடுகாட்டைச் சென்றடைந்தது. தயாராக அவளுடைய உடலுக்காக விறகுகளும், எருமட்டைகளும் காத்திருந்தன.

   "டேய், ஆண்டிமுத்து. எங்கடா வெறவையும் எருமட்டையும். தள்ளிட்டியா? ஒன்னத்துமே காணமே "
               
"அட நீங்க வேற. கொடுத்தப் பணத்துக்கு இவ்வளவு தாங்க வாங்க முடிஞ்சது"                

"சரி...சரி ஆக வேண்டியதப் பாருங்கடா"

   "பொணத்த இப்படி வடக்க முகம் பார்த்தாப்பல வைங்க"
               
உடலை வண்டியி ருந்து தூக்கி கீழே வைக்கும்போது அவளுடைய செல்லக்குட்டி "மியாவ்...மியாவ்..." என்று சுற்றிச் சுற்றி வந்தது. எரிச்சலுடன் ஒருவன் வேகமாக ஒரு உதை விட்டான். அது எதிரேயுள்ள சுவற்றில் மோதி அங்கேயே விழுந்தது.

"டேய், ஆண்டிமுத்து பொணத்தோடு இந்தப் பூனையையும் சேர்த்து எரிச்சுடுடா. பூனையும் பூட்டுது"  தூக்கிப் போட்டான் உதைவிட்டவன்.

                அவள் உடல் முழுவதும் சுற்றி எருமட்டை விறகை வைத்து வேகமாக அடுக்கினான் ஆண்டிமுத்து.


"டேய் பொணத்த நல்லா வெந்து சாம்பலானப்பெறகு நாளைக்கு பாலையும் நீயே தெளிச்சு ஆத்துல விட்டுடு. இந்தா பத்து ரூபா. எங்களுக்கு நிறையா வேலையிருக்கு"

   "இன்னாங்கண்ணே. பத்து ரூபா. இது எந்த மூலைக்கு. பால் வாங்கவே பத்தாது"
                
"டேய். இவரு அப்படியே ட்ரு பால் வாங்கி அப்படியே ஊத்தப் போறாரு. சும்மா சாங்கியத்துக்கு செய்யப் போற. போடா போதும்"

"விக்கிற விலைவாசியில அதெல்லாம் சரி வராதுங்க"

"சரி...சரி... இந்தாடா கூட பத்து ரூபா. இதுக்குமேல கேட்ட கொன்னுப் பூடுவோம். காரியத்தை ஒழுங்கா முடிச்சுப்போடு. வாங்கடா போகலாம். கள்ளுக்கடையில கள்ளு தீர்ந்துட போவுது" சொல் விட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினார்கள்.

     விறகு எருமட்டையை அவள் மீது அடுக்கிய ஆண்டி முத்துக்கு அவள் போர்த்தியிருந்த புடவை மீது கண்பட்டது. நால்வரையும் திரும்பிப் பார்த்தான். கண்ணுக்கு எட்டின தொலைவில் சென்றார்கள்.

              "நீ பொறக்கும் போதும் ஒன்னும் கொண்டு வரல. போகும் போது மட்டும் ஒனக்கு எதுக்கு இந்தச் சேலை. இன்னும் கொஞ்ச நேரத்துல கட்டையில வேகப்போற. இந்த பொடவையக் கொடுத்தாக்க எம்பொண்டாட்டி எம்மேல கொஞ்சம் பாசமாவது காட்டுவா. நான் எப்ப இதுமாதிரிப் பொடவையை அவளுக்கு வாங்கிக் கொடுக்கப் போறேன்++ என்று சொல்லி  அவள் மீது இருந்த புடவையை உருவி, ஓரத்தில் சுருட்டி வைத்துவிட்டு, செத்துப்போன பூனைக்குட்டியை அவள் மீது போட்டு, விறகையும் எருமட்டைகளையும் வைத்து அடுக்கி மண்ணெண்னை ஊற்றி எரிய வைத்தான்.

அவளும் மீனாக்குட்டியும் நெருப்பு ஜ்வாலைக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள்.

     புதரில் மறைத்து வைத்திருந்த விறகு எருமட்டை சேலை சகிதமாக கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினான் ஆண்டிமுத்து.

 (வெட்டவெளியில் சிறுகதை தொகுப்பிலிருந்து ஆர்.மணவாளன் எழுதியது)

No comments:

Post a Comment