Saturday, June 11, 2011


முதலிரவில்


அன்று அவளுக்கு முதல் ராத்திரி. நாணிக்கோணி தலை குனிந்து மெல்ல மெல்ல அன்னம் போல எவர்சில்வர் சொம்பு ததும்ப பசும் பாலை எடுத்துக்கொண்டு கட்டின் மேல் அமர்ந்துள்ள அவள் அத்தானுக்கு பின்னால் முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு அமைதியாக வந்து உட்கார்ந்தாள்.
ஐந்து நிமிடம் ஆகியது. பத்து நிமிடம் ஆகியது. பதினைந்து நிமிடம் ஆகியது. என்ன இந்த ஆள் மரக்காட்டையா? வந்து எவ்வளவோ நேரமாகியும்  தீண்டவில்லையே என்று அவளுக்குள் சந்தேகம். அப்போதுதான் சற்று பொறுமை இழந்து மெல்ல கணைத்தாள்.

"கணைச்சது போதும். நாம்ப ஒன்னும் புதுசா பழகினதில்ல. நீயும் நானும் இந்த காடு நெலம் வாய்க்காவரப்ப சுதி ஓடி புடிச்சு விளையாடியது இந்த ஊருக்கே தரியும். உன் அப்பனும் என் அப்பனும் 20 ஆயிரத்த கல்யாணப்பரிசு கடனா என் தலையில வெச்சுட்டு போயிருக்காங்க. அந்தக் கடன அடைக்கிறதுக்கே ஒரு வருஷமாயிடும். வந்த பணத்துல பாதிக்கடன குடுத்துடலாம்ன்னா கனவிலே இருக்கேன். பிரிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் யார்.. யார் எவ்வளவு வெச்சு இருக்காங்கன்னு. இதெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். இந்த நோட்டப்புடி. இந்தப் பையில இருக்கிறது எனக்கு வந்த பணம் அந்த பையில இருக்கிறது உனக்கு வந்தது.''

அதுவரை மவுனம் காத்திருந்தவள் வெடுக்கென்,'' எனக்கு வந்தப் பணத்தை நீ எப்படி எடுக்கலாம்?'' என்றாள்.


'' அடிச்செருப்பால. உங்க அப்பன் எனக்கு ஒன்னும் போடல. சைட் அடிச்சதனால அதான் சாக்குன்னு என் தலையில் ஒன்னக்கட்டி வெச்சுட்டான். மரியாதையா நான் சொல்றத எழுது'' என்று சற்று கோபமாக பேசப்போக. உடனே அவள்,'' அப்ப என்ன உண்மையா காதலிக்கலையா? என்று சிணுங்க.'' யார் சொன்னது? இப்போ அதெல்லாம் பேசறதுக்கு டைம் இல்ல. சிணுங்கறத விட்டுட்டு பேசாம நான் சொல்ற்த எழுது'' என்று சொல் அவள் சிணுங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

முணுமுணுத்துக்கொண்டே பேனாவை எடுத்து எழுத ஆயத்தமானாள். அன்பான அத்தான் கவரைப்பிரித்து படிக்கத் தொடங்கினான்.

''தேர் முட்டி தேவராசு ரூபாய் 25. குத்துக்கட்டை கோபாளு ரூபாய் 50. சைக்கிள் செயின் சின்னராசு ரூபாய் 20. முண்டியம்பாக்கம் முனியம்மா ரூபாய் 30.இப்படியாக மைக்கில் சொல்வது போல் முதல் இரவு கட்டில் அவன் ஒவ்வொரு கவராகப் பிரித்து வாசிக்க அவள் எழுத மணி 12 ஆகிவிட்டது.

''முதல் ராத்திரிக்கு அவனவன் என்னென்னமோ செய்வானுங்க. இந்த முண்டம் மொய்ப்பணத்தை நடுராத்திரியில எழுத சொல்லுது. எல்லாம் என் தலை விதி'' என்று கொட்டாவி விட்டபடி முறைக்க,

''என்னடி நான் பாட்டுக்கும் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு என்னையே முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்க'' என்று அதட்ட, ''உம். சொல்லுங்க'' என்று வள்ளுன்னு விழுந்ததும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கவரைப் பிரித்து படிக்கத் தொடங்கினான்.

. ''மாரியாத்தா ரூபாய் 100. பாய் கடை பஷீர் ரூபாய் 15.'' இப்படியே சொல்லிக்கொண்டே மாமனார் சைடு வந்த பணத்தை கவுன்ட் பண்ணச்சொன்னான்.

'' 5000 ரூபாய்'' என்று கூட்டி அவள் சொன்னதும்.


'' நான் எதிர்பார்த்தது 10,000 ரூபாய். வந்தவங்க எல்லாம் இருபதும் முப்பதும் வெச்சுட்டு வயிரு முட்ட சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. இவுங்க அவுங்க வீட்டு விசேஷத்துல வெச்சாத்தானே அவுங்க திருப்பி வைப்பாங்க. ம்.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான். என் வூட்டு சைடு பைய எடு.'' என்றதும்,

''மாமா.'' என்று கண்ணை கசக்கினாள்.

''அடச் சீ. சூட்டோட சூடா சீக்கிரம் எழுது. விடிஞ்சதும் கடனை போய் திருப்பி
பைசல் பண்ணனும்'' என்றதும்

''ம்.. சிணுங்கி கொண்டே எழுதுகிறாள் அவன் சொல்ல சொல்ல. கடைசியாக மொத்தமான ஒரு கவரைப்பிரித்தான். அதிலிருந்து ஒரு கடிதம். அதை எடுத்துப் படித்தான். சைல்ன்ட்டா அதை அவளிடம் கொடுத்து படிக்கச் சொன்னான். அவளும் வாங்கிப்படித்தாள்.

'' புதிய தம்பதியினருக்கு. இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தும் அப்பாவு செட்டியார். தம்பி உங்க அப்பா ஆறு மாசத்துக்கு முன்னாடி 600 ரூபாய் கடனா வாங்கினாரு. இதுவரைக்கும் வட்டியும் தரல அசலும் வரலை. நீங்க படிச்சவங்க நாணயமானவங்கன்னு தெரியும். அவர் கொடுக்க வேண்டிய வட்டிப்பணம் 50 ரூபாயை எனது கல்யாண வரிசையாக நீ எடுத்துக்கொண்டு. அசலான 600 ரூபாயை தற்போது உங்களுக்கு வந்திருக்கும் மொய்ப்பணத்திலிருந்து எடுத்து கொடுத்து பைசல் பண்ணவும்.

அன்புடன் வாழ்த்தும் அப்பாவுச் செட்டியார்.''

படித்துக்கொண்டே விழுந்து விழுந்து சிரிக்க.. பக்கத்து வீட்டு சேவல் கூவியது.

- ஆர். மணவாளன் 

No comments:

Post a Comment