Tuesday, February 22, 2011

மனக்கணக்கு




மனக்கணக்கு
(சிறுகதை)

அவனும் அவளும் ஒரு கைலாங்கடை துணி சோப்புக் கம்பெனியில் வேலை செய்து வந்தார்கள். அந்த சோப்பு கம்பெனிக்குச் செல்ல இரண்டு பஸ் ஏறி இறங்க வேண்டும். அவனாகப்பட்டவன் மேனேஜர் கம் லீகல் அட்வைசராக மாதம் ரூபாய் ஐய்யாயிரத் திற்கும்.அவளாகப்பட்டவள் சேல்ஸ் கேர்ளாக பத்தோடு பதினொன்றாக மாதம் ஆயிரத்து ஐனூற்றுக்கும் ஊர் ஊராக.வீடு வீடாக ஏறி இறங்கி தங்கள் கம்பெனி சோப்பின் புகழை செய்முறை பயிற்சி மூலம் விளம்பரப்படுத்தி வந்தாள்.

ஐந்து வருடத்திற்க்கு முன்னால் இந்த கம்பெனி சோப்பும் செங்கல்லும் ஒன்று. செங்கல்கூட தண்ணீரில் போட்டால் கரைந்துவிடும். ஆனால் இந்தக் கம்பெனி சோப்போ அப்பேர்ப்பட்டதல்ல, சுத்தியால் அதன் தலையில் ஓங்கிப் போட்டால் கூட சுக்கு நூறாகாது. அவ்வளவு ஸ்திரத்தன்மை வாய்ந்தவை. 

இவன் மேனேஜராகப் பதவி ஏற்றதும், குல்மால் பண்ண பார்முலாவை ஓரங்கட்டிவிட்டு சிறந்த கெமிஸ்ட்டின் உதவியுடன் புதிய பார்முலாவை உபயோகித்து நடுத்தர மற்றும் ஏழை ஏளியவர்கள் சோப்பை குறைந்த விலையில் உபயோகிக்கும் அளவுக்கு உருவாக்கினான்.

ஐந்து சேல்ஸ் கேர்ளாக இருந்தது தற்போது பதினைந்தாக உயர்ந்து, அவனுடைய பாஸ் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு இரண்டு ப்ரான்ச் திறக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.  
ஆரம்ப காலத்தில் பாஸும் இவனும் ரொம்ப அன்னியோன்னியமாக இருந்தார்கள். அவனுக்கு ஒர்க்கிங் பார்ட்னர்ஷிப் ஷேர் கொடுப்பதாக ஆசைக்காட்டியவர். இன்று வியாபார நேக்கு போக்கு எல்லாம் அவனிடமிருந்து கற்றுக் கொண்டு இவனை கல்த்தா கொடுப்பதற்காக ஏதாவது அவனிடத்தில் குற்றம் குறை கண்டு கம்பெனியைவிட்டு நீக்கி தானே கம்பெனி முழு பொறுப்பையும் ஏற்கத் திட்டமிட்டிருந்தார்.

இவன் வக்கீலுக்குப் படித்துள்ளதால், ஏதாச்சும் சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பினால் ஏடா கூடமாக மாட்டிக்கிட்டு பிற்பாடு அவதிபடும்படி நேரிடுமோ என்று உள்ளுக்குள் பாஸுக்கு கொஞ்சம் பயம்கூட இவனிடத்தில் உண்டு.
  
இவனும் லேசுப்பட்டவன் அல்ல. வந்த சண்டையையும் விடமாட்டான் வம்பு சண்டைக்கும் போகமாட்டான். மாட்டி இழுக்கக் கூடிய திறமையுண்டு.

பாஸ் பொண்டாட்டிக்கு ஒரு நல்ல குணம். எந்த ஒரு சேல்ஸ் கேர்ளாவது தன்னைவிட அழகா இருந்தாள் என்றாள் அவ்வளவுதான். அப்பேர்ப்பட்டவளை எப்படி வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்புவது என்று தீவிரமாக யோசித்து அனுப்புவாள். தன் கணவர் மண்டையிலே ப்ளே கிரவுண்டா இருந்தாலும் வேலை செய்யற எவளையாவது சின்ன வீடா செட்டப் பண்ணிவிடுவானோ என்று அவளுக்குக்ப் பயம்.

அதற்காகவே இண்டர்வியூ வைத்து செலக்ட் பண்ணும் போது வத்தலும், தொத்தலுமா,உதட்டைவிட்டு பல்வெளியுலகத்துக்கு எட்டிப்பார்க்கிறமாதிரி, பல்லு கொஞ்சம் எடுப்பா, கண் என்னை பார்ன்னா ஏரியப் பார்க்கிற மாதிரி யுள்ள் பெண்களைத்தான் வேலைக்கு அமர்த்துவாள். இதுகூட ஒரு காரணம் சோப்பு கம்பெனி படுத்ததற்க்கு. இவன் வந்த பிறகு இவர்களுடன் புதிய அழகிகளை அமர்த்தி பிஸினஸ் பிக்கப் பண்ணினான். இதனால்கூட இவன் மீது பாஸ் மனைவிக்கு கொஞ்சம் காண்டு வெறுப்பு எல்லாம்.

புதியதாக வந்தப் பெண்களில் அவளாகப்பட்டவள் கொஞ்சம் அழகானவள். நாளுக்கு ஒரு புடவை. இன்ஸ்ட்டால்மென்ட்டில் வாங்கி கட்டக்கூடிய வசதிப்படைத்தவள். கிளியோபாட்ரா மாதிரி கருப்பு. சுருட்டை முடி. சைஸ் கொஞ்சம் உப்பல். அவளை எப்படியும் விரட்ட வேண்டுமென்பதே பாஸ் மனைவியின் குறிக்கோள்.

இப்படியாக இருக்கையில். ஒருநாள் அவளும் அவனும் தனியாக மதிய வேளையில் தனி அறையில் சாப்பிட நேர்ந்தது. கொஞ்சம் தாராளமாக எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவன். அவளும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் அலட்டல் மங்காத்தா. சில வேளைகளில் 70 எம்.எம்.மாதிரி ரீலும் விடுவாள்.

'' சார்.  உங்களுக்கு எப்ப சார் கல்யாணம்?'' கேள்வியை அவள்தான் டிபன் பாக்ஸைத் திறந்து கொண்டே கேட்டாள்.

"இந்த பொட்டிக் கம்பெனியில தூக்க முடியாம தூக்கி 5000 ரூபா தர்றான். அதுவும் மாசம் ரெண்டு இன்ஸ்ட்டால்மென்ட். இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா?'' என்றான் எ¡¢ச்சலாக.

" ஏன் சார். நீங்க இவ்வளவு படிச்சுட்டு இருக்கீங்க. பேங்க்லியோ இல்ல லாயராகவோ போயிருக்கலாமே. இந்த பொட்டிக் கடையில வந்து குப்பை கொட்டிட்டு இருக்கீங்களே" என்றாள்.

"என் தலையில பிரம்மா இப்படி இப்படின்னு எழுதி வெச்சுட்டான். என்ன செய்யறது? சம்பந்தம் சம்பந்தமில்லாதவனுக்குத்தான் பேங்கல வேலை. தமிழ் லிட்ரேச்சர் படிச்சுட்டு பேங்க்கில்ல கைட்டுவான். பி.காம்., எம்.காம் படிச்சுட்டு டைப்பிஸ்ட்டா இருப்பான். கேஸ் கிடைக்காம ஒரு சீனியர் வக்கீலுக்கிட்ட ஒன்பது பேரு வேலை செய்வானுங்க. சாதாரண ரிக்ஸாக்காரன் கூட ஒரு நா¨ள்க்கு கெஸட்டர் சம்பளம் வாங்கறான். வக்கீலுங்க மாசத்துக்கு 1500 ரூபாக்கூட வாங்கறது கிடையாது. இப்படி இருக்குது நம்ப நாட்டுலப் படிச்சவன் தலையெழுத்து" இரண்டாவது கேள்விக்கு மூச்சுவிடாமல் பதிலளித்தான்.

" சரி, ஏதாச்சும் பேங்கில்ல லோன் போட்டு, இதுபோல ஒரு சின்ன கம்பெனி தொடங்கலாம்ல்ல. அதவிட்டுட்டு இந்தப் பொட்டிக் கடை கம்பெனியில வந்து குப்பை கொட்டிட்டு இருக்கீங்க" என்றாள்.

"என்ன செய்யறதுங்க, பேங்கில்ல லோன் அப்ளைபண்ணா, எம்.எல்.ஏ, மினிஸ்டர், எம்,பி.,ன்னு ரெக்கமன்டேஷன் வேணும்.அதுக்கு கொஞ்சம் அன்பளிப்பு தரணும் அப்புறம் பேங்க் மேனேஜருக்கு கமிஷன் கொடுக்கனும்.50,000 வாங்கினாக்கா 40,000ந்தான் லோன் கெடைக்கும். இதுல நான் ஒரு 30,000 போடனும். எங்க போறது அவ்வளவு பணத்துக்கு?" என்று விரக்தியோடு சொன்னான்.

"ம். இவ்வளவு உழைச்சும் உங்களுக்கு ஒரு நல்ல பேரு கிடையாது" பெருத்த பெருமூச்சுடன் அவனுக்கு ஆதரவாகச் சொன்னாள்.

"என்ன செய்யறதுங்க, செஞ்ச நன்றியை ஒருத்தன் மறக்கறான்னா இந்த உலகம் கூடிய சீக்கிரத்தில அழியப் போகுதுன்னு அர்த்தம். பகவத் கீதையில அப்படித்தான் சொல்லலியிருக்கு" கோமாளித்தனமாக அவன் சொன்னதும்,"மண்ணாங்கட்டி" என்று அழுத்திச் சொன்னாள். இந்த அழுத்தமான வார்த்தையில் ஏதோ இரண்டு மூன்று வருஷம் இவனிடம் அன்னியோன்னியமாக பழகினது போல சொன்னாள். இவள் வாங்கி வந்த மசால் வடையில் பாதியை பரிமாறிக் கொண்டு மீண்டும் தங்களது சம்பாஷணையைத் தொடர்ந்தார்கள்.

"ஆமா, நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. நாங்கல்லாம் நாப்பது வயசு ஆனாக்கூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன் தொன்னு¡று வயசு கிழவனானாக்கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்தை பெத்துக்கலாம். புரூவ் பண்ணியிருக்காங்க" சொன்னதும் க்லுக்கென்று ஒரு சிரிப்பு சிரித்தாள்.வாயில் போட்ட சோறு அவள் மூக்கு வழியாக வெளியே வந்தது.

வெட்கத்தால் புடவை நுனியால் துடைத்துவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பிட்டாள்.

அவன் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

"ஆனா, நீங்க பொண்ணுங்க அப்படியில்ல. நாளுக்கு நாள் மாப்பிள்ளை ரேட் வேறு அதிகமாயிட்டே போகுது. உங்களுக்கு பின்னால எத்தனை பேரு இன்னும் இருக்காங்க"

"நாங்க ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு ஆணுங்க சார்."

"நீங்கதான் பெரியப் பொண்ணா?"

"நான்தான் சார் வீட்லியே பெரியவ?"

"சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, மத்தவங்களுக்கு வழிவிடுங்க. அது சரி. உங்க வீட்ல எத்தனை பவுணு நகை போடுவாங்க உங்களுக்கு?"

"இருபது பவுன் போடுவாங்க சார்"

"80,000 ரூபாயச்சு. கவர்ன்மென்ட்ல ஏதாச்சும் ஒரு வேல வாங்கிட்டு கல்யாணத்தைப் பண்ணிக்கலாமே"

"எனக்கு இந்த ஆம்பளைங்களையே பிடிக்கல சார். இவ்வளவு கொண்டுட்டுவா.அவ்வளவு கொண்டுட்டுவான்னு வரதட்சணை கேட்பாங்க"

"வரதட்சணை வாங்கச் சொல்லி தூண்டறதே உங்க மாதிரி தாய் குலம் தானே.அதுவும் கல்யாணம் ஆனப்பிறகு கிரைண்டர் வாங்கிக்கொடு. மிக்ஸி வாங்கிக்கொடு. டி.வி.வாங்கி கொடுன்னு அவனை அரிச்சி எடுப்பீங்க. அவன் ஒருத்தன் சம்பாதிச்சு பொண்டாட்டி தேவையைப் பூர்த்தி செய்வானா? படிக்க வெச்ச அப்பா அம்மா குடும்பத்தைப் பார்ப்பானா? இந்த காலத்துல நடுத்தர குடும்பத்துல இருக்கறவங்க குப்பை கொட்ட முடியாதுங்க. என்னைக்கும் ஆம்பள மேலேயே குத்தம் சொல்லாதீங்க. இனிமேலயாவது மாத்திக்குங்க" 

இப்படியே காரசாரமாக பேசிக்கிட்டு இரண்டு பேரும் தங்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு கற்பனையில் மிதந்தார்கள்.

"ஆளுக்கிட்ட நல்ல திறமையிருக்கு. கொஞ்சம் இளிச்சவாயன் மாதி¡¢த்தான். ஆசைக்காட்டி அட்ஜஸ் பண்ணி வளைத்துப் போட்டால், படிப்புக்கு படிப்பு. பெர்சனாலிட்டிக்கு பெர்சனாலிட்டி. 20 பவுனும் மிச்சம். நாமும் இவள மாதிரி பாஸாயிடலாம். தம்பி-தங்கைகளுக்கு கல்யாணத்தைப் பண்ணிவைக்கலாம். சொஸைட்டியில நமக்கு ஒரு நல்ல அந்தஸ்த்து கிடைக்கும்" என்று கற்பனையுலகில் சஞ்சரித்தாள். 

அவள் அப்படியென்றால் இவன்,''பார்க்கறதுக்கு கொஞ்சம் மழுமழுப்பான கட்டையாத்தான் இருக்கு. 20 பவுனுகூட கொஞ்சம் கல்யாணத்தை ஓசியில பண்ணி வெச்சா போதும். கல்யாணாம் பண்ற காசை நாம வாங்கிட்டு ஏதாச்சும் ஒரு கோயில்ல தாலிகட்டி ரிசப்ஷன் வெச்சு அதுலேயும் ஒரு அடி அடிச்சுடலாம்.பிறகு நம்ப லைப் செட்லாயிடும். ரெண்டு வருஷத்தில இதுமாதிரி ரெண்டு கம்பெனி உருவாக்கிவிடுவேன்.'' என்று ஏழு குதிரை பூட்டிய கற்பனைத் தேரில் பறந்துச் சென்றான்.

மறுநாள், அவளாகப்பட்டவள். அவனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்து விட்டது."வரதட்சணை வாங்க மாட்டார்.படிப்புக்கு படிப்பு.பெர்சனால்ட்டிக்கு பெர்சனால்ட்டி.20 பவுனும் மிச்சம்.எப்படி என் செலக்ஷன்'' என்று கயிறுவிட்டாள் சகத் தோழியர்களிடம். இது எப்படியோ காற்றுவாக்கில் அவர்களது பாஸ் மனைவிக்கு எட்டியது.

பத்ரகாளி மாதிரி அவனிடத்தில் வந்து தான் கேள்விப்பட்டதை அப்படியே ஒப்பித்தாள்.

அவ்வளவுதான் கேல்குலேஷன் போட்டவன் தலையில் இடி விழுந்தது.

வரதட்சணை வாங்கமாட்டார். படிப்புக்கு படிப்பு.பெர்சனால்ட்டிக்கு பெர்சனால்ட்டி.20 பவுனும் மிச்சம்.எப்படி என் செல்க்ஷன்''இந்த வார்த்தைகள் சினிமா படத்தில் வருவது போல் நான்கு பக்கமும் சுவற்றிலிருந்து எதிர் தாக்குதல் பண்ணி எக்காளிப்பது போல இருந்தது அவனுக்கு. 

இரண்டு நிமிடம் மௌன அதிர்ச்சியிலிருந்தவன் உடனே உத்தம புருஷன் மாதிரி அவளை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினான்.

சிறிது நேரத்தில் அவள் கதவைத்திறந்து,''மே ஐ கம் இன் சார்'' என்று சொல் எட்டிப்பார்த்து உள்ளே வந்தாள்.

"என்ன மிஸ் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.நான் உங்களோடு பேசினது சாப்பிட்டது எல்லாம் ஒரு பிரண்ட் மாதிரி பைத்தியக்காரத்தனமாக ஏதாவது கற்பனை செய்யாதீங்க" என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டான்.

"பாவி. நான் எவ்வளவு கணக்குப் போட்டு கனவு கண்டிட்டு இருந்தேன். இப்படி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டானே. சத்தியமா உருப்படமாட்டான்" என்று தலையைக் குனிந்து கரிந்து கொட்டினாள் அவனை.

பக்கத்தில் இருந்த பாஸ் மனைவி இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி,"எங்க கம்பெனிக்கு நல்ல பொண்ணுங்கதாம்மா தேவை. இதுமாதிரி இருந்தா கம்பெனி பேரு ரிப்பேராகிவிடும். சம்பள்த்தை வாங்கிட்டு நின்னுடுங்க. அதுவுமில்லாம கம்பெனியில நெறைய பேர் இருக்காங்க.கம்பெனி நஷ்டத்தில வேறு ஓடுது" என்று சொல்லி கணக்குப் பண்ணி காசை கையில் திணித்தாள். வாங்கிக் கொண்டு "நல்லாயிருப்பியாடா பாவி. என் கனவில மண்ணள்ளி போட்டுட்டியாடா''என்று மனதுக்குள்ளே கரிந்து கொண்டு விசனத்தோடு சென்றவளை ஓரக்கண்ணால் தலையை நட்டுக் கொண்டு காக்காப் பார்வைப் பார்த்தான். பாஸ் ம்னைவி ஒரு நல்ல காரியத்தை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் அறையை விட்டு வெளியேறினாள்.

(சூரியோதயம் என்ற இதழில் ஆர். மணவாளன் எழுதியது )