Saturday, June 11, 2011


முதலிரவில்


அன்று அவளுக்கு முதல் ராத்திரி. நாணிக்கோணி தலை குனிந்து மெல்ல மெல்ல அன்னம் போல எவர்சில்வர் சொம்பு ததும்ப பசும் பாலை எடுத்துக்கொண்டு கட்டின் மேல் அமர்ந்துள்ள அவள் அத்தானுக்கு பின்னால் முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு அமைதியாக வந்து உட்கார்ந்தாள்.
ஐந்து நிமிடம் ஆகியது. பத்து நிமிடம் ஆகியது. பதினைந்து நிமிடம் ஆகியது. என்ன இந்த ஆள் மரக்காட்டையா? வந்து எவ்வளவோ நேரமாகியும்  தீண்டவில்லையே என்று அவளுக்குள் சந்தேகம். அப்போதுதான் சற்று பொறுமை இழந்து மெல்ல கணைத்தாள்.

"கணைச்சது போதும். நாம்ப ஒன்னும் புதுசா பழகினதில்ல. நீயும் நானும் இந்த காடு நெலம் வாய்க்காவரப்ப சுதி ஓடி புடிச்சு விளையாடியது இந்த ஊருக்கே தரியும். உன் அப்பனும் என் அப்பனும் 20 ஆயிரத்த கல்யாணப்பரிசு கடனா என் தலையில வெச்சுட்டு போயிருக்காங்க. அந்தக் கடன அடைக்கிறதுக்கே ஒரு வருஷமாயிடும். வந்த பணத்துல பாதிக்கடன குடுத்துடலாம்ன்னா கனவிலே இருக்கேன். பிரிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் யார்.. யார் எவ்வளவு வெச்சு இருக்காங்கன்னு. இதெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். இந்த நோட்டப்புடி. இந்தப் பையில இருக்கிறது எனக்கு வந்த பணம் அந்த பையில இருக்கிறது உனக்கு வந்தது.''

அதுவரை மவுனம் காத்திருந்தவள் வெடுக்கென்,'' எனக்கு வந்தப் பணத்தை நீ எப்படி எடுக்கலாம்?'' என்றாள்.


'' அடிச்செருப்பால. உங்க அப்பன் எனக்கு ஒன்னும் போடல. சைட் அடிச்சதனால அதான் சாக்குன்னு என் தலையில் ஒன்னக்கட்டி வெச்சுட்டான். மரியாதையா நான் சொல்றத எழுது'' என்று சற்று கோபமாக பேசப்போக. உடனே அவள்,'' அப்ப என்ன உண்மையா காதலிக்கலையா? என்று சிணுங்க.'' யார் சொன்னது? இப்போ அதெல்லாம் பேசறதுக்கு டைம் இல்ல. சிணுங்கறத விட்டுட்டு பேசாம நான் சொல்ற்த எழுது'' என்று சொல் அவள் சிணுங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

முணுமுணுத்துக்கொண்டே பேனாவை எடுத்து எழுத ஆயத்தமானாள். அன்பான அத்தான் கவரைப்பிரித்து படிக்கத் தொடங்கினான்.

''தேர் முட்டி தேவராசு ரூபாய் 25. குத்துக்கட்டை கோபாளு ரூபாய் 50. சைக்கிள் செயின் சின்னராசு ரூபாய் 20. முண்டியம்பாக்கம் முனியம்மா ரூபாய் 30.இப்படியாக மைக்கில் சொல்வது போல் முதல் இரவு கட்டில் அவன் ஒவ்வொரு கவராகப் பிரித்து வாசிக்க அவள் எழுத மணி 12 ஆகிவிட்டது.

''முதல் ராத்திரிக்கு அவனவன் என்னென்னமோ செய்வானுங்க. இந்த முண்டம் மொய்ப்பணத்தை நடுராத்திரியில எழுத சொல்லுது. எல்லாம் என் தலை விதி'' என்று கொட்டாவி விட்டபடி முறைக்க,

''என்னடி நான் பாட்டுக்கும் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு என்னையே முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்க'' என்று அதட்ட, ''உம். சொல்லுங்க'' என்று வள்ளுன்னு விழுந்ததும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கவரைப் பிரித்து படிக்கத் தொடங்கினான்.

. ''மாரியாத்தா ரூபாய் 100. பாய் கடை பஷீர் ரூபாய் 15.'' இப்படியே சொல்லிக்கொண்டே மாமனார் சைடு வந்த பணத்தை கவுன்ட் பண்ணச்சொன்னான்.

'' 5000 ரூபாய்'' என்று கூட்டி அவள் சொன்னதும்.


'' நான் எதிர்பார்த்தது 10,000 ரூபாய். வந்தவங்க எல்லாம் இருபதும் முப்பதும் வெச்சுட்டு வயிரு முட்ட சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. இவுங்க அவுங்க வீட்டு விசேஷத்துல வெச்சாத்தானே அவுங்க திருப்பி வைப்பாங்க. ம்.. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான். என் வூட்டு சைடு பைய எடு.'' என்றதும்,

''மாமா.'' என்று கண்ணை கசக்கினாள்.

''அடச் சீ. சூட்டோட சூடா சீக்கிரம் எழுது. விடிஞ்சதும் கடனை போய் திருப்பி
பைசல் பண்ணனும்'' என்றதும்

''ம்.. சிணுங்கி கொண்டே எழுதுகிறாள் அவன் சொல்ல சொல்ல. கடைசியாக மொத்தமான ஒரு கவரைப்பிரித்தான். அதிலிருந்து ஒரு கடிதம். அதை எடுத்துப் படித்தான். சைல்ன்ட்டா அதை அவளிடம் கொடுத்து படிக்கச் சொன்னான். அவளும் வாங்கிப்படித்தாள்.

'' புதிய தம்பதியினருக்கு. இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தும் அப்பாவு செட்டியார். தம்பி உங்க அப்பா ஆறு மாசத்துக்கு முன்னாடி 600 ரூபாய் கடனா வாங்கினாரு. இதுவரைக்கும் வட்டியும் தரல அசலும் வரலை. நீங்க படிச்சவங்க நாணயமானவங்கன்னு தெரியும். அவர் கொடுக்க வேண்டிய வட்டிப்பணம் 50 ரூபாயை எனது கல்யாண வரிசையாக நீ எடுத்துக்கொண்டு. அசலான 600 ரூபாயை தற்போது உங்களுக்கு வந்திருக்கும் மொய்ப்பணத்திலிருந்து எடுத்து கொடுத்து பைசல் பண்ணவும்.

அன்புடன் வாழ்த்தும் அப்பாவுச் செட்டியார்.''

படித்துக்கொண்டே விழுந்து விழுந்து சிரிக்க.. பக்கத்து வீட்டு சேவல் கூவியது.

- ஆர். மணவாளன் 

சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்


சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்



நம் ஊர் அய்யனார் கோயில்களில் சுடு மண்ணால் செய்து வைக்கப்பட்ட போர் வீரர்கள், குதிரைகள், நாய்கள் போன்று சீனாவில் இறந்த அரசர் மற்றும் வீரர்களின் நினைவாக மண்ணால் செய்யப்பட்ட டரக்கோட்டா சிலைகள் 1974ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

லீஷான் மலைக்கு கிழக்கே சியான் ஷான்சி பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் தண்ணீருக்காகக் கிணறு தோண்டும் போது இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷமான் டரக்கோட்டா படை வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்தார். இத்தகவலை அறிந்த சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவ்விடத்தை அகழ்ந்து தோண்டினர். அதில் மூன்று நீளமான குழிகளில் 1800 டரக்கோட்டா சிலைகளாக படைவீரர்கள், 130 ரதங்கள், 520 குதிரைகள், 150 போர்க்குதிரைகள் போன்றவை வெளி உலகுக்கு தரிந்தது.

இவையாவும் சீனாவின் முதலாவது பேரரசனான குய்ன் ஷி யுவாங்கின் கல்லறைக்கு அருகாமையில் இருந்தது. ஒவ்வொரு சிலையின் உயரமும்
6 அடியிலிருந்து 6.5 அடி உயரம் வரை உள்ளது. இந்த உயரம் யாவும் படைவீரர்களின் தகுதிக்கு ஏற்ப உள்ளது.

படைவீரர்கள், குதிரைகள், ரதங்களைத்தவிர உயர் அதிகாரிகள், கழைக் கூத்தாடிகள்,வலிமை பொருந்திய மனிதர்கள், இசை விற்பன்னர்கள் போன்றவர்களும் உண்டு. அத்துடன் பேரரசரின் உடலைப் புதைத்த இடமும் தோண்டி எடுக்கப்பட்டது.

சீனாவின் வரலாற்று ஆசிரியரான சிமா குய்ன் என்பவர் இந்த மசோலியம் என்று சொல்லக்கூடிய கல்லறையைக் கட்டுவதற்கான கட்டுமானப்பணி கி.மு.246ல் தொடங்கினார். இப்பணியில் சுமார் 7 லட்ச்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இக்கல்றையை கட்டத் தொடங்கும் போது குன் ஷி குவாங்கிற்கு வயது பதின்மூன்று.

கி.மு.209-210ம் ஆண்டில் வாழ்ந்த சீனாவின் முதலாம் பேரரசர் குய்ன் ஷி குவாங்க் இறந்த போது அவருடன் இந்த டரக்கோட்டா படைவீரர்களும் புதைக்கப்பட்டனர். முதலாம் மன்னன் குய்ன் அப்படைக்குத் தலைமை தாங்குவது போலவும் அவரைப் படைவீரர்கள் பின்தொடர்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை மன்னர் இறந்துவிட்டாலும் அவருக்குத் தொண்டு செய்வது இந்தப் படை வீரர்களின் கடமையாகும். இவர்களக் குய்ன்ஸ் படைவீரர்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த மண் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் லீஷான் மலையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அகழ்வாராய்ச்சியின் போது இந்தப் படை வீரர்களுக்கு அருகாமையிலேயே பேரரசரின் கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)


கபிலர் குன்று


கபிலர் குன்று



மன்னன் மலையமான் வம்சத்தினர் சங்க காலத்தில் திருக்கோயிலூர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர்.

இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் கபிலர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நெருங்கிய நண்பராவார். முடியுடை மூவேந்தர்கள் பாரியையும் அவன் ஆண்ட பரம்பு நாட்டையும் முற்றுகையிட்டு அழித்துவிட பாரி வள்ளல் தன் இரு மகள்கைளையும் கபிலரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டான். 

  
அதன் பிறகு கபிலர் தனது நண்பரின் மகள்களைத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்த இடம்தான் திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் நடுவே உள்ள சிறு குன்றாகும். இக்குன்றே கபிலர் குன்று என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அக்குன்றின் மேல் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இக்குன்றின் உச்சியை அடைய ஒருவர் மட்டும் செல்லக்கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை திருக்கோவிலூர் வீரட்டாணத்தில் உள்ள இராஜராஜன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)