Saturday, January 22, 2011

சாலையோரப் பூக்கள்



சிறுகதை-3  
சாலையோரப் பூக்கள்
                                   - ஆர். மணவாளன் 

ரோட்டு ஓரம் மரவாடி மதிற்சுவரை ஒட்டிய இடத்தில் போஸ்டரால் செய்யப்பட்ட ஒரு சிறிய கூடாரத்தில் அவர்களது அன்றாட வாழ்க்கை. அதாவது பிறப்பு இறப்பு தாம்பத்யம் சாப்பாடு விருந்தோம்பல் எல்லாமே அந்த ரோட்டு ஓரத்தில்தான்.
 
தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எழுந்திருச்சு பானையில் உள்ள பழந்தண்ணீரில் முகம் அலம்பிவிட்டு. த்லைமேல் இருக்கும் பூவரச மரக்கிளையின் நுனியியை ஒடித்து பல் தேய்க்க குச்சியை வாயில் வைத்து ரிக்ஷ¡வை மிதித்து செல்வான். பஸ் ஸ்டாண்ட் போகிறவழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 'ரெண்டுக்கு' போய்விட்டு ஏதெனும் குட்டையிலோ அல்லது முனிசிப்பாலிட்டி குழாயிலோ குண்டியை கழுவினாலும் கழுவுவான் அல்லது வெஸ்டெர்ன் ஸ்டைலில் ட்ஷ்யூ பேப்பரில் துடைத்துப் போடுவது போல் குப்பையிலிருந்து காகிதத்தை எடுத்து துடைத்துப் போட்டுவிட்டு, வண்டியை மிதித்தால் இரவு பத்து அல்லது பதினோரு மணிக்கு வீடு திரும்புவான்.

அவனுடைய சம்பாத்தியம் என்னவோ ஒரு நாளைக்கு கெஸட்டர் ஆபிசருக்கு சமமாத்தான் இருக்கும். அவ்வளவும் அவனது கடின உழைப்பு. ஆனால் வண்டி வாடகை மற்றும் ரிப்பேர் செலவில் தினந்தோறும் கால்பங்கு போய்விடும். மீதம் உள்ள முக்கால் பங்கு மூனாம் நெம்பர் கள்ளுக்கடைக்குப் போய்விட்டு பொண்டாட்டிக்கும் ஆத்தாவுக்கும் சேர்த்து ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வருவான். கையில் அவனிடதில் தினந்தோறும் அஞ்சோ பத்தோ கொடுப்பான். இதுதான் அவனுடைய வாடிகையான செயல்.

அன்றைக்கு அவனுடைய அவள். அவனுக்காக ரோட்டு ஓரத்திலே குளித்துவிட்டு சீவி சிங்காரிச்சு தலை நிறைய மல்லிகை மணக்க, காரமீன் குழம்பு அடுப்பில் குதிக்க,தன்னுடைய கூடாரதிற்க்கும் அடுப்புக்கும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

கணெஷ் பீடியை வாயில் வைத்து புகையைக் கக்கிக்கொண்டு கையில் இரண்டு பாட்டில் ஆங்கிலத் தண்ணியை எடுத்து வந்தவன், ஒன்றை தாயாரிடமும் மற்றொன்றைத் தாரத்திடமும் கொடுத்தான். ஆத்தா அதை எடுத்துக்கொண்டு எதிரேயுள்ள திண்ணைக்கு ஓடிவிட்டாள்.

''என்னா, இன்னிக்கு வெள்ளோட்டமா.''

அட இன்னிக்கு வெளியூர் பார்ட்டி ரெண்டு ஏறிடிச்சு. அதுங்கள இழுத்துக்கிட்டுப்போய் தள்ளிட்டு வந்தேன் அதான்."

'' த, நீ ஒண்ணும் தள்ளிட்டுப் போவலியே''

''அடச்சீ உம்புத்தி எங்க போவும்''

பேசிக்கிட்டு இருக்கும்போதே. கான்ஸ்டபிள் ரெண்டுபேர் லத்தியால் ஒரு தட்டு கூடாரத்தின் மீது தட்டினர்.

''யார்ராது''

'' எவண்டா''

''ஹே. யாருன்னு நெச்சு டா போட்ற. வண்டிக்கார நாயே.''

'' மிஸே.யாருன்னு தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க''

'' ம்...ம்.. அதோ தனியா நிக்குதே அந்த பார்ட்டிய வண்டியில ஏத்திட்டு போயி அய்யாக்கிட்ட கொண்டுவிடு. இன்னிக்கு அய்யா நைட் டூட்டி.  இந்தாடா இந்த பிரியாணி பார்சல் பாட்டிலயும் கொண்டுபோய் கொடு.''

''சரிங்க''

''யாருன்னு கேட்டா 502, 503 ரெண்டு பேரும் சேர்ந்து அனுப்பி வெச்சாங்கன்னு சொல்லு'' என்றார் 503.

''சரிங்க''

''எங்கடா. அங்கப் போறே.''

'' அவகிட்ட சொல்லிட்டு வர்ரேங்க''

''ம்...ம்.. சீக்கிரம் வாடா''

இருவரும் ஓரத்தில் ஒதுங்கியிருந்த பார்ட்டியிடம் நகர்ந்தார்கள்''

'' தா... போலிசுக்காரங்க எவளையோ தள்ளிட்டு வந்திருக்காங்க. அத எஸ்.ஐ.கிட்ட வரச்சொன்னாங்க. த் ரெண்டு எட்ல போயிட்டு வண்டுடறன்.''

'' த் சீக்கிரமா வாய்யா, காரமீனுக் கொழம்பு சுடச்சுட சாப்பிட்டத்தான் நல்லாயிருக்கும்.''

''நீ கொழம்ப எறக்கி வெக்கறதுக்குள்ள வந்துடறன்.'' சொல்லிவிட்டு ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு பார்ட்டியிடம் நகர்ந்தான்.

''ம்.. ஏறும்மா..'' திரும்பி பார்த்துவிட்டு

''வரட்டுக மிஸே.''

''ம்...ம்.... பத்திரம்மா பார்ட்டிய சேர்த்துட்டு வாடா.''  

'' தேவ்டியா பசங்க... பெரியவன் சின்னவங்க மாரியாதையே கெடையாது. இவனுங்களுக்கு வண்டிக்காரனுங்கன்னா அவ்வளவு எலக்காரமா போயிட்டானுங்க. பொறம்போக்கு நாய்ங்க காக்கி சட்டையை போட்டுட்டா பெரிய மயிருன்னு நெனப்பு.''

முனகிக்கொண்டே பார்ட்டியை வண்டியில் ஏற்றிக்கொண்டு சவாரி செய்தான்.

கான்ஸ்டபிள் இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட சரக்கின் 'கிக்'கினால் அப்படியே ஜீப்பின் மீது சாய்ந்தனர்.

''யோவ்....புல் பாட்டில் சோடா இல்லாம அடிச்சதனால வயிறு கப கபன்னு எரியுதுய்யா.''

''அட எனக்குந்தாய்யா. இந்த ராத்திரியில கடை வேறு இல்ல.''

'' அட நீ வேறு ஒன்னுய்யா. அங்கப்பாரு குட்டி வைக்கிற மீன் கொழம்பு அப்படியே மூக்க கில்லுது.''

'' நம்ப வீட்லையுந்த்தான் இருக்காளுவல. எவளுக்காவது இது மாதிரி கொழம்பு வைக்க தெரியுத?''

''யோவ் அவன் போய் வர்ரதுக்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆவும். வா.. போவலாம்.

''த்... பொண்ணு, இன்னா கொழம்பு வெச்சிருக்க''

''கார மீனு கொழம்புங்க''

503 சட்டியை திறந்து பார்த்துவிட்டு, சட்டி நெறையா இருக்கு. இவ்வளத்தையுமா சாப்டுவீங்க.''

''இது ரெண்டு நாளைக்குங்க''

''சரி.. .. சரி .. கரமீனுக் கொழம்பு மூக்கத் தொலைக்குது. எலைய எடுத்துட்டு, சாதம் கொழம்பு எல்லாத்தையும் ஜீப்பாண்ட கொண்டுட்டு வா..''

''போயும்.... போயும்... எங்க சாப்பாட்டியா?''

''அட. நீ வேற பாப்பா , எங்களுக்கு ஜாதில்ல, மதமில்ல எல்லாம் சம்மதம்.. ம்...ம்.. சீக்கிரம் கொதிக்கிற கொழம்பையும் அந்த குண்டாஞ் சோத்தையும் எலையையும் எடுத்துட்டு வந்து சேரு'' 503 சொல்லிவிட்டு செல்ல. ஆசையா ஆம்படையனுக்கு வைத்த குழம்பையும் சோத்தையும் வருத்தத்துடன் தூக்கிக் கொண்டு ஜீப்பை நோக்கிப்புறப்பட்டாள்.

பின்புரம் உள்ள ஜீப்பில் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்க. அவள் இலையை விரித்து பரிமாற, இருவரும் மூக்குப்பிடிக்க விளாசிவிட்டனர். குண்டாஞ்ச்சோறும் குழ்ம்பும் சட்டியும் காலி.

''யோவ். எம் பொண்டாட்டிக்கூட இது மாதி¡¢ சாப்பாடு போட்டதில்ல. அவ்வளவு பிரமாதய்யா.''

''எனக்கு சோறு சாப்பிட்டதுகூட திருப்தியில்ல. என் வூட்டுக்காரி  அவ ஆத்தவூட்டுக்குப் போயி அஞ்சு நாளாச்சு. இந்தக் குட்டி பார்க்கற்துக்கு மழு மழுப்பாத்தான் இருக்கா. நீ என்னா செய்யற அவ வூட்டுக்காரன் வரானான்னு பாரு நான் முடிச்சுட்டு  வண்டதும், நீ... போ...'' 503 கிள்ம்ப, 502,''அடியே சோறு என்னம்மோ நல்லத்தான் இருந்தது. கொஞ்சம் இப்படி வந்து படுடி..'' என்று கையைப் பிடித்து இழுக்க,

''வாணாங்க.''

''என்னடி வேணாங்கற, நீ என்னமோ உத்தமி மாதிரியும். நான் என்னமோ உத்தம புருஷன் மாதிரியும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பள்ள்த்தில தொழில் பண்ணிட்டு இப்போ என்ன்மோ பத்தினி வேஷம் போடற.

''நான் இப்போ தாலி கட்டன் பொண்டாட்டிங்க''

''இன்னாடி பெரியதாலி. த பாரு இது மாதிரி  பிகு பண்ண போலிசுக்காரன் புத்திய காட்டிடுவோம். ம்.. சீக்கிரம் வா அடுத்த ஆளு வேற் காத்திருக்கான்'' கையைப் பிடித்து இழுத்து கட்டி அணைக்கிறார்.

ஐந்து நிமிடம் கழித்து பட்டனைப் போட்டுக் கொண்டு வாயில் பில்டர் சிகரெட்டை ஊதிகொண்டு 502 வெளியே வந்து 503க்கு சிக்னல் கொடுத்தார். இப்போது 503 வேனின் உள்ளே குலுங்க ஐந்து நிமிட இடைவெளிக்குப்பின் நின்றது.

ஒரு மணி நேரம் கழித்து வண்டிக்காரன் ரிக்ஷாவை ஓரமாக விட்டுவிட்டு சிறிய கூடாரத்திற்க்குள் நுழைந்தான். குண்டான் காலி, சட்டி காலி, த்லைவிரி  கோலமாக சாக்கில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள். மூன்றுமாத குழந்தை மூத்திரத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்க மெல்ல அவளருகில் சென்று,

' த என்னடி நடந்தது.''

'அந்த கம்மின்னாட்டி பசங்க சோறு கொழம்பு எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு என்னையும்... இதுக்கு நா சம்மதிக்கலன்னா இந்த கூடாரத்தை நாளைக்கு பிச்சு போட்டுட்டுவோம்ன்னு சொன்னான்ங்க. உன்னையும் திருட்டு கேஸ்ல்ல புக் பண்ணி உள்ள்த் த்ள்ளிடுவோம்ன்னு மிரட்டினாங்க.''

'' இங்க வெச்ச பாட்லு எங்கடி?''

''அதையும் அந்த பொற்ம்போக்குங்க எடுத்துட்டு போய்யிட்டனுங்க. இடுகுகுதான் நா தலப்பாட அடிச்சுக்கிட்டேன். சம்பாதிக்கறதுல கொஞ்சம் நெருக்கி எங்கியாவது பொறம்போக்கில ஒரு குடிசை போட்டுக்க்லாம்ன்னு சொன்னேன். நீ என் பேச்சை கேட்டியா? இல்ல உன் ஆத்தா பாவி முண்டை கேட்டாளா? சம்பாதிக்கிறத எல்லாத்தையும் கள்ளுக்கடையில வெச்சுடற. அவளுக்கு ஒரு பாட்ல கொண்டாந்து கொடுத்துடறே. இப்போ ரோட்டுல போற நாயில்லாம் என்ன ருசி பார்த்துட்டு போவுது.''

''சரி ... சரி .. விடுடி'' என்று சொல்லிவிட்டு, உதட்டின் ஓரத்தில் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு வண்டியில் அமர்ந்து வானத்தை நோக்கி சிந்தனையில் ஆழ்ந்தான் நேரம் தெரியாமல். தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, அழுத பிள்ளைக்கு ஜாக்கெட்டை நீக்கி பால் கொடுக்கத் தயாரானாள் அவள்.

 

Friday, January 21, 2011

பாலுக்கும் கள்ளுக்கும்


பாலுக்கும் கள்ளுக்கும் 
 
செக்குமேடு. இது ஒரு காலத்தில் பாண்டிச்சேரியில் பலான தொழில் நடக்கும் காந்தபுரா. சோனாகன்ச். கோடம்பாக்கம் போன்றதோர் இடமாகும்.வயது வித்தியாசமின்றி அவ்வழியே போகும் இள வாலிபர்களையும் ஆடவர்களையும் மார்புத் துணியை விலகி கண்ணால் சைகை காட்டி கையைப்பிடித்து பாலியல் சுகத்திற்க்கு கட்டாயமாக கூட்டிவரும் கணிகையர்கள் நிறையபேர் எப்போதும் ஒவ்வொரு குடிசை கதவருகே காத்திருப்பர்.24 மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒரு சொர்க்காபுரி.
 
15க்கு 30 அடி நிலப்பரப்பில் ஒவ்வொரு குடிசைகளும் அதனுள்ளே ஏழு அறைகள் மண் சுவரால் தலை வரை தடுப்பு சுவர் நன்றாக சாணிபோட்டு மெழுகி இருக்கும்.
 
     முதல் அறையின் இன்ப ஓசை
 
" என்ன இருந்தாலும் எல்லா விஷயத்திலும் மங்களம் ...மங்களம் தான். இந்த வயசிலேயும் எப்படி கட்டு குலையாம இருக்க மங்களம். இந்தா ஒனக்காக ஆசையா ஒரு பொட்டலம் பி¡¢யாணியும் ஒரு பாட்லு பிராந்தியும் வாங்கியாந்து இருக்கேன் என் ஞாபகார்த்தமா வெசுக்கோ".
 
அடுத்த அறையில் பிணம் போல ஒருத்தி படுத்திருக்க. அவளை அம்மணமாக ஒருவன் கட்டித்தழுவ
 
" யோவ் சீக்கிரம் முடிக்சிட்டு வெளியேறதப் பாரு. நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்கு ஒனக்கு எல்லாத்தையும் அவுத்து போட்டு காட்டுவாங்க. பட்டு.. பட்டுன்னு சட்டைய கழட்டனுமா வேலைய முடிச்சமான்னு இல்ல.சீக்கிரம் எந்திரியா" என்று குரல் கேட்க,
 
     மூன்றாவது அறையில்,
 
" நல்லா மூக்கமுட்ட குடிச்சிட்டு எதுல வெக்கிறதுனே தெரியல. எவ்வளவு பணம் வெச்சிருக்க?.வெளியூரா?"
  
     " ஆமா"     
 
" சரி...சரி.. சீக்கிரம் முடிச்சிட்டு எடத்தை காலி பண்ணு."
 
"எங்க இருக்குன்னு தெரியல. ஓ... "அங்கேயே வாந்தியெடுக்க.
 
"கருமாந்தரம். இங்கேயே எல்லாத்தையும் எடுத்திட்டியாய்யா. ஒரே நாத்தம்மா நாறுது. சனியன சீக்கிரம் கிளம்பு."
 
"ஒன்னுமே செய்யலையே"
 
"செஞ்சது வரைக்கும் போதும் எந்திரி." என்று விரட்டியதும். மெல்ல எழுந்து தள்ளாடி.. தள்ளாடி நடந்து போனான்.
 
ஐந்தாவது அரையில்,
 
"காசில்லாம எதுக்கு வந்த.மூனு மாசத்து பாக்கி அப்படியே இருக்கு. அத குடுக்க துப்பில்ல வெள்ளையும் சொல்லையுமா போட்டுட்டு வந்துட்ட. படுக்கும் போதே யோசிச்சு இருக்கனும்."
 
" த... ந... கண்டிப்பா அடுத்த மாசம் சம்பளம் வாங்கியதும் கொடுத்துடறேன்"
 
'' யோவ்.மொதல்ல கையில இருக்கிற மோதிரத்தை கழட்டு. கடன கொடுத்துட்டு மோதிரத்தை மூட்டுகிட்டு போ'' என்று கஸ்டமர் கையில் இருந்த மோதிரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கினாள் அந்த அறைக்கு சொந்தக்காரி.மோதிரத்தை பறிக்கொடுத்தவன் அவள் மார்பைத் தொடப் போக,
 
''தச்சே கைய எடு'' சொல்லி சேலையை  சரி  செய்தாள்.
 
ஆறாவது அறையில் ரி 
 
'' முந்தானேத்து வந்து போனதிலேயிருந்து ஒரே எரிச்சலா இருக்கு நோய்... கீய்... ஏதாச்சும் வாங்கிட்டியா? என்று ஒருவன் அவனது பார்ட்னருடன் கேட்க,
 
ஏழாவது அறையிலிருந்து, அந்த ஒட்டு மொத்த குடிசைக்கு சொந்தக்காரி எவனுடனோ படுத்துக்கொண்டே,
 
'' எவண்டாவன். எங்குட்டிகளப் பார்த்து நோய் கீய்ன்னு சொல்றது.நேத்துதான் அவ அவளையும் இழுத்துட்டுப்போய் செக்காப்பு பண்ணிட்டு வந்தேன். நாக்க புடுங்கிடுவேன். ஏண்டி. அந்தாண்ட யாரு.''
 
''நா தாம்மா தனம்.''
 
''ஏய் அவங்கிட்ட பணத்த புடுங்கிட்டு வெளிய அனுப்பு.இவன் குடுக்கற மூனு ரூபாவுக்கு எல்லா கேள்வியும் கேட்டுப்புட்டு பூடுவான்.
 
''யோவ் முடிச்சியா சீக்கிரம் எழுந்திரு, அந்த நாய போய் ஒரு கை பார்க்கணும்.''
 
''கொஞ்சம் தடவிக் கொடேன்.''
 
''நா தடவி ஒனக்கு வரதுக்குள்ள வெடிஞ்சுடும்.இன்னொரு நாளைக்கு வா.இப்போ எழுந்திரு.'' வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி அனுப்பிவிட்டு.நடையை கட்டினாள் மாமி.
 
''எங்கடி அந்த கம்மின்னாட்டி''
 
''நீ போட்ட சத்தத்தில ஓடியே போயிட்டான்''
 
''சரி ... சரி... இந்த மாதிரி கழிசாடைங்ககிட்ட எவளும் படுக்காதீங்கடி'' சொல்லிவிட்டு கஸ்டமா¢ன் அழுக்கை கழுவுவதற்கு தோட்டப்பக்கம் போனாள்.
 
தென்னந்தோப்பு. பௌர்ணமி நிலவொளியில் அழுதுகொண்டிருந்த கை குழந்தையுடன் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.
 
''யாரடியம்மா கொழந்தைய இப்படி வீல்ன்னு அழுவவிட்டு நிக்கறது''
''நா தாம்மா செண்பகம்.''
 
''என்னடியம்மா இந்த நேரத்துல கொழந்தைய அழவெச்சுகிட்டு இருக்கே. பாலு.. கீலு.. கொடுக்கக்கூடாது.''
 
''எம்பால குடிச்சா இதுக்கு வயித்த வலிக்குது. எங்கிட்ட பாலில்லம்மா.இந்த பச்சப்புள்ள பாலுக்கும் அந்த மனுஷன் கள்ளுக்கும் நான் எவங்கிட்டயாவது படுத்துதாம்மா ஆகனும்.இல்லேன்னா என்னை வெட்டிப்போட்டுடுவான் அந்த மனுஷன்"
 
''ஏண்டி சிறுக்கி. இந்த நாய்க்கிட்ட கஷ்ட்டப்படணும். எத்தனை கழுதை இங்க வருது.அதுல எதையாவது ஒன்ன புடிச்சிகிட்டு எங்கியாவது ஒடிட வேண்டியதுதானே."
 
'' நா அந்த மனுஷங்கிட்ட  சொல்லாம எங்கியாவது ஓடிடலாம்ன்னு நெனச்சு, பஸ் ஸ்டாண்டுக்கு போனேன்.என்னை தேடி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூடியாந்து சாத்தோ சாத்துன்னு சாத்திட்டான்.அத்தோடில்லம்மா கை காலு முதுகு எங்கபார்த்தாலும் சூடு போட்டுட்டான்.'' என்று அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் புடவையை அவிழ்த்து காண்பிக்க பதறிப்போய்,''அடி பாவி முண்ட .இவ்ளோத்தையும் எப்படித்தான் தாங்கிக்கிட்டு இருக்கியோ.இப்பேர்ப்பட்ட கம்மினாட்டிய சோத்துல விஷம் வெச்சு கொன்னுட வேண்டியதுதானே.''
    
'' அந்த மாதிரி ¨தைரியம் இருந்தா நான் ஏம்மா இங்க வரப் போறேன்.''
  
'' அது சரி.ஒன் ஆத்தா அப்பன் வீட்டுக்கு போயிட வேண்டியதுதானே.''
 
'' இப்படி கெட்டு சீரழிஞ்சு எந்த மொகத்தோட நான் அங்கப் போவேன். மழை இல்லாம வெவசாயம் போச்சு. பொட்ட புள்ளைய வீட்ல வெச்சுக்கறது நல்லது இல்லன்னு,ரெண்டு காணி நெலத்தை வித்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க.  நல்ல மாப்பிள்ள. ஆலையில வேலை செய்யறானேன்னு கொடுத்தாங்க. இங்க வந்து பார்த்தப்புரம்தான் தெரிஞ்சுது குடிச்சுட்டு வேலைக்கு போகாம ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான்னு. கொஞ்ச நாளானதும் என் ஆத்தா அப்பன் இங்க வந்து என்னை பார்க்கக்கூடாது.நானும் அங்க போகக்கூடாதுன்னு சொல்லி என் வாழ்க்கைய சீரழிச்சுட்டான்.தெனம் தெனம் அந்த மனுஷங்கிட்ட செத்து பொழைக்கிறேம்மா.''
 
'' இப்போ அந்த கம்மினாட்டி எங்க?"    
 
''ரெண்டு குட்டிகள இழுத்துக்கிட்டு தலைவரு வூட்டுக்கு போயிருக்கான். அவன் வர்ரதுக்குள்ள நான் அவன் குடிக்கிறதுக்கு முப்பது ரூபா வெச்சுடனும்.இல்லேன்னா என்னை வெட்டிப்போட்டுடுவான்.''
  
''போலீஸ்ல பிராது கொடுத்தாலும் எல்லாம் அவன் ஆளாத்தான் இருப்பானுங்க. ஏண்டியம்மா ஒரு நாளைக்கு எத்தனை தடவமா போவே? நீயே சீக்காலி மாதிரி இருக்கே. ஒன் கொழந்தையோ தேவாங்கு மாதிரி இருக்கு. சரி.. சரி..  நீ ஒன்னும் எவங்கிட்டேயும் படுக்கத்தேவையில்லை. இந்தா ஒன் கொழந்தைக்கு பாலுக்கும் அந்த தூம குடிக்கறதுக்கு கள்ளுக்கும் வெச்சுக்கு.'' சொல்லி முப்பது ரூபாயை கொடுத்தாள் அந்த மகராசி. அழுத கொழந்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கிட்டு ஒரு கையால் மூக்கை புடவையால் துடைத்துக்கொண்டு கிளம்பினாள் செண்பகம்.
 
(சூரியோதயம் மாத இதழில் ஆர்.மணவாளன் எழுதி வெளிவந்த சிறுகதை)
 
 

Tuesday, January 18, 2011

பொன்மனச் செம்மல்



பொன்மனச் செம்மல்
(சிறுகதை)


 இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பது பொய். கம்யூனிஸ்ட் பொய். சுவாமிகள் பொய். மதங்கள் பொய். சட்டங்கள் பொய். தாய் பொய். தாரம் பொய். வானம் பொய். வாழ்க்கை பொய். ஆனால் அவள்...

                அவள்தான் நிஜம். அவள்தான் உண்மையான இந்தியா. உண்மையான கம்யூனிஸ்ட். அவளிடத்தில் ஜாதி இல்லை. மதம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. ஏழை பணக்காரன் வித்தியாசமில்லை. ஆசையோடு வருபவர்களை அன்போடு கட்டியணைக்கும் உண்மையான தோழி.

                கொடிகட்டி வாழ்ந்தார்கள் என்று சொல்வார்களே. அதுபோல அவள் 1957 ருந்து 1977 வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தாள்.

                அவளைப் பெற்ற புண்ணியவதி யார்? என்று அவளுக்கே தெரியாது. குப்பைத் தொட்டியில் கண்டெடுத்து, யாரோ ஒரு பலான தொழில்புரியும் கிழவியிடம் வளர்ந்து,16 வயதில் பூப்படைந்து, ரிக்ஷாக்காரனால் கட்டாயமாக கன்னிகழிந்து அரங்கேற்றப்பட்டவள். பின்பு டிரைவர்,டாக்டர்,வக்கீல், எம்.எல்.ஏ.மந்திரிகள் என்று அவளது உடம்பை நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவி ருந்து விடியும்வரை அந்தக்கால ஃபியட்டிருந்து இம்பாலா வரை எத்தனை கார்கள் தவம் கிடந்து காத்திருந்தன.

                பொன்மனச் செம்மல் என்று இவளுக்குப் பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கலாம்.ஏனோ இந்த மந்திரிமார்களுக்கு அவ்வளவு ஞாபகமில்லை போலும்.

                தன் சதையை விற்ற கூலியில் எத்தனை குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தாள். தன்னுடைய நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று எண்ணிப் பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழவைத்த பெண்கள்தான் எத்தனை பேர்? நாடி வந்த தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தன் வீட்டிற்கு வரும் அதிகாரிகளிடமும் மந்திரிமார்களிடமும் சொல்லி  அரசுத்துறையில் வேலையில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

                அதெல்லாம் 1957 ருந்து 1977 வரை பிரகாசமாய் வாழ்ந்த காலம்.

                இன்று யாரோ ஒரு புண்ணியவான் பரிசாகக் கொடுத்த நோயினால் படுத்த படுக்கையாக பாழடைந்த பங்களாவில். ஓட்டக்கட்டிலில் கருவாடுபோல வதங்கி மூச்சுக்கூட விடமூடியாமல் திணறிக் கொண்டு இருந்தவளுக்கு ஒரு ஊசியைப் போட்டுவிட்டு வேண்டா வெறுப்பாக, இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்கும் ஏதாச்சும் சொந்தக்காரங்களுக்கு சொல்லனும்ன்னா சொல்லிடுங்க. இல்ல ஏதாச்சும் எழுதி வாங்கனும்ன்னாலும் எழுதி வாங்கிடுங்க என்று சொல்லி விட்டுச் சென்றார் மருத்துவம் பார்த்த டாக்டர்.

    அந்த பாழடைந்த பங்களாவுக்காகவும் தட்டுமுட்டு மரச்சாமான்களுக்காகவும் பங்கு போடக் காத்திருந்த அவள் வீட்டருகே குடியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஸ்டாம்ப் பத்திரத்தோடு தயாராக இருந்தார்கள்.

                சிறிது நேரம் சென்றது. அவள் மெல்ல கண் விழித்தாள். கண்ணெதிரே நால்வர். கண்களில் நீர்த்ததும்ப கைகள் நடுக்கத்துடன் வணக்கம் வைத்தாள்.

                அவள் எதிரே சிறிய ஸ்டூலில் "மியாவ்... மியாவ்" என்றது. அவளது ஆசை மீனாக்குட்டி. நால்வரில் ஒருவன் அதைவிரட்ட அவள் சைகையால் வேண்டாம் என்றாள்.
               
 "காரியம் முடியட்டும். ஒன்ன அப்புறம் பேசிக்கிறேன் என்று சொல்" 

 ஸ்டாம்ப் பத்திரத்தை ஒருவன் நீட்ட, இன்னொருவன் அவள் கைவிரல் மைதடவி பத்திரத்தில் ஒரு அழுத்து அழுத்தி பத்திரமாக சுருட்டி வைத்தான்.

          "டேய், எல்லாம் ஒழுங்கா நாலு பேருக்கும் சமமாத்தானே எழுதியிருக்கு."

            "நாய.  நான் என்ன ஒன்ன மாதிரி திருட்டு பேமானியா?"

    "யாரடா திருட்டு பேமானின்னு சொன்ன. தேவ்டியா பையா" என்று சட்டையைப் பிடிச்சு இழுக்க,

      "டேய்....டேய்... அந்தப் பொம்பளையப் பாருடா" என்று ஒருவன் அவசரமாகச் சொல்ல நால்வரும் அவளை உற்று நோக்குகிறார்கள்.

                "தண்ணி.... தண்ணி...."

        "டேய்... தண்ணிக் கொண்டுட்டு வாடா" என்று ஒருவன் சொல்ல. இன்னொருவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் கேவிக்கொண்டே அவள் உயிர் பிரிந்தது.

         "டேய்... தண்ணி கொடுக்கறதுக்குள்ள. பொம்பள மண்டையப் போட்டுட்டது பாவம்ண்டா"

   "சரி...சரி... விடு ஆக வேண்டியதப் பார்ப்போம். ஏம்பா நீங்கரெண்டுபேரும் மேரியில உத்தரவு வாங்கிட்டு முனிசிபா ட்டி வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரும்போது, மாலை வத்தி பூ பழம் சட்டி எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுங்க நாங்க ரெண்டுபேரும் இங்க ஆக வேண்டியதைக் கவனிக்கிறோம்"

      "எல்லாம் இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும். ஊர்ல நாலுபேர் கூட்டி வாங்கப்பா. நாங்க கௌம்பறோம்" சொல்லிவிட்டு இருவர் வெளியேர, இன்னொருவன் வீட்டின் வெளியே வந்து,

     "மொதலியாற, பொம்பள மண்டையப் போட்டுட்டது. கொஞ்சம் காரியத்துக்கு வர்ரீங்களா?"

     "அவ பொறப்பு என்ன? கோத்ரம் என்ன? உடம்ப வித்தவளுக்கு என் வூட்டுக்காரரு வருவாராக்கும். அதுக்கு, வேற ஆளப் பாருங்கடா. நீங்க உள்ளப் போங்க சொல்றன்" ஆம்படையான உள்ளே தள்ளிக்கிட்டுச் சென்றாள்.
                
"மொத யாரூட்டமா, ஒன் புள்ளைக்கு ஆபீஸ் வேலைக்காக இந்த பொம்பளக்கிட்ட நடையா நடந்தது மறந்து போச்சாக்கும் தூத்தாரி என்னாடா உலகம்?"

  "நாமத்தான் நாலுபேர் இருக்கோமே இன்னும் எதுக்கடா? பேசாம ஆகவேண்டியதைப் பார்ப்போம்.பேமானி ஜெனங்க எவனக் கூப்பிட்டாலும் வரமாட்டானுங்க. பெரிய கவுரவ மயிறுப் பார்ப்பானுங்க. இதுக்குத்தாண்டா சொல்றது. சாவரகாலத்துல கொஞ்சம் சொத்துப்பத்து இருக்கனுங்கறது. அப்படி இருந்தாத்தான் எங்க கெடக்கிற எச்செல நாய்ங்கெல்லாம் வரும்" சொல்லிவிட்டு காரியத்தைத் தொடங்கலானார்கள்.
                
    சரியாக ஒருமணி நேரம் சென்றது. உயிராக இருக்கும் போது எந்த மனித ஜென்மங்கள் அவள் சதையை ருசிப் பார்த்தார்களோ; அதே சதையை உயிர் பிரிந்தபோது ஈக்கள் கூட்டமாக வந்து மொய்த்தன.

        முனிசிபாலிட்டியி ருந்து சவவண்டி வந்தாகிவிட்டது. ஒருவன் ரோஜாப்பூ மாலை,ஊதுபத்தி,தேங்காய்,பழம், சட்டி, முறம் ஆகியவற்றுடன் வந்தான்.

                இன்னொருவன் வீட்டில் உள்ள பழைய காலத்து ட்ரங் பெட்டியைத் திறந்து நல்ல புடவை ஒன்றை எடுத்து அவள்மேல் போர்த்தி ரோஜா மாலையை கழுத்தில் போட்டு சரி செய்தான்.
                
சவ வண்டியை அலங்கரித்தவன், "எல்லாம் ரெடியாச்சு. தூக்குங்கப்பா" என்றான்.

அவளை நால்வரும் தூக்கிக்கொண்டு வண்டியில் வைத்துவிட்டு,ஒருவன் முன்னால் பிடித்து இழுக்க.பக்கவாட்டில் இருவர், பின்னால் ஒருவன் தள்ள, அவளுடைய பிரேதம் சுடுகாட்டை நோக்கிப்புறப்பட்டது. கூடவே "மியாவ்... மியாவ் ..." என்று வழிநெடுகக் கத்திக்கொண்டே வந்தது அவளுடைய செல்லப் பிராணி மீனாக்குட்டி.
                
இருபுரமும் குடித்தனக்காரர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து பட்டென்று கதவைப் பூட்டியவர்களும் உண்டு. உத்தமி போல் பேசிய பத்மனிமார்கள் வண்டியைப் பார்த்து வீட்டிற்குள் மறைந்தவர்களும் உண்டு.

                சவ வண்டி சுடுகாட்டைச் சென்றடைந்தது. தயாராக அவளுடைய உடலுக்காக விறகுகளும், எருமட்டைகளும் காத்திருந்தன.

   "டேய், ஆண்டிமுத்து. எங்கடா வெறவையும் எருமட்டையும். தள்ளிட்டியா? ஒன்னத்துமே காணமே "
               
"அட நீங்க வேற. கொடுத்தப் பணத்துக்கு இவ்வளவு தாங்க வாங்க முடிஞ்சது"                

"சரி...சரி ஆக வேண்டியதப் பாருங்கடா"

   "பொணத்த இப்படி வடக்க முகம் பார்த்தாப்பல வைங்க"
               
உடலை வண்டியி ருந்து தூக்கி கீழே வைக்கும்போது அவளுடைய செல்லக்குட்டி "மியாவ்...மியாவ்..." என்று சுற்றிச் சுற்றி வந்தது. எரிச்சலுடன் ஒருவன் வேகமாக ஒரு உதை விட்டான். அது எதிரேயுள்ள சுவற்றில் மோதி அங்கேயே விழுந்தது.

"டேய், ஆண்டிமுத்து பொணத்தோடு இந்தப் பூனையையும் சேர்த்து எரிச்சுடுடா. பூனையும் பூட்டுது"  தூக்கிப் போட்டான் உதைவிட்டவன்.

                அவள் உடல் முழுவதும் சுற்றி எருமட்டை விறகை வைத்து வேகமாக அடுக்கினான் ஆண்டிமுத்து.


"டேய் பொணத்த நல்லா வெந்து சாம்பலானப்பெறகு நாளைக்கு பாலையும் நீயே தெளிச்சு ஆத்துல விட்டுடு. இந்தா பத்து ரூபா. எங்களுக்கு நிறையா வேலையிருக்கு"

   "இன்னாங்கண்ணே. பத்து ரூபா. இது எந்த மூலைக்கு. பால் வாங்கவே பத்தாது"
                
"டேய். இவரு அப்படியே ட்ரு பால் வாங்கி அப்படியே ஊத்தப் போறாரு. சும்மா சாங்கியத்துக்கு செய்யப் போற. போடா போதும்"

"விக்கிற விலைவாசியில அதெல்லாம் சரி வராதுங்க"

"சரி...சரி... இந்தாடா கூட பத்து ரூபா. இதுக்குமேல கேட்ட கொன்னுப் பூடுவோம். காரியத்தை ஒழுங்கா முடிச்சுப்போடு. வாங்கடா போகலாம். கள்ளுக்கடையில கள்ளு தீர்ந்துட போவுது" சொல் விட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினார்கள்.

     விறகு எருமட்டையை அவள் மீது அடுக்கிய ஆண்டி முத்துக்கு அவள் போர்த்தியிருந்த புடவை மீது கண்பட்டது. நால்வரையும் திரும்பிப் பார்த்தான். கண்ணுக்கு எட்டின தொலைவில் சென்றார்கள்.

              "நீ பொறக்கும் போதும் ஒன்னும் கொண்டு வரல. போகும் போது மட்டும் ஒனக்கு எதுக்கு இந்தச் சேலை. இன்னும் கொஞ்ச நேரத்துல கட்டையில வேகப்போற. இந்த பொடவையக் கொடுத்தாக்க எம்பொண்டாட்டி எம்மேல கொஞ்சம் பாசமாவது காட்டுவா. நான் எப்ப இதுமாதிரிப் பொடவையை அவளுக்கு வாங்கிக் கொடுக்கப் போறேன்++ என்று சொல்லி  அவள் மீது இருந்த புடவையை உருவி, ஓரத்தில் சுருட்டி வைத்துவிட்டு, செத்துப்போன பூனைக்குட்டியை அவள் மீது போட்டு, விறகையும் எருமட்டைகளையும் வைத்து அடுக்கி மண்ணெண்னை ஊற்றி எரிய வைத்தான்.

அவளும் மீனாக்குட்டியும் நெருப்பு ஜ்வாலைக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள்.

     புதரில் மறைத்து வைத்திருந்த விறகு எருமட்டை சேலை சகிதமாக கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினான் ஆண்டிமுத்து.

 (வெட்டவெளியில் சிறுகதை தொகுப்பிலிருந்து ஆர்.மணவாளன் எழுதியது)